சேலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் - மாநகராட்சி ஆணையாளர் வழங்கினார்

சேலத்தில் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு கபசுர குடிநீரை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் வழங்கினார்.

Update: 2020-07-01 01:17 GMT
சேலம்,

சேலம் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தொற்று நோய் தடுப்பு பணிகளில், பல்வேறு நடவடிக்கைகள் மாநகராட்சி நிர்வாகத்தால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாநகராட்சிக்குட்பட்ட 15 கோட்டங்களில் 17 இடங்கள் கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிகளில் தீவிர நோய் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் அஸ்தம்பட்டி மண்டலம் கோட்டம் எண்.6-ல் கட்டுப்படுத்தப்பட்ட பகுதியான பிரகாசம் நகர் பகுதியில் வசிக்கக்கூடிய பொதுமக்களுக்கு கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நேற்று தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதனை மாநகராட்சி ஆணையாளர் சதீஷ் தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசும் போது, கட்டுப்படுத்தப்பட்ட 17 இடங்களில் வசிக்கக்கூடிய அனைத்து பொதுமக்களுக்கும் கபசுர குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. எனவே கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் அனைத்து பொதுமக்களும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பொருட்டு கபசுர குடிநீரினை பருகியும் மற்றும் தங்களுக்கு வழங்கப்படும் ஓமியோபதி மாத்திரைகளை உரிய இடைவெளியில் உட்கொண்டு, நோய் தொற்றிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டார்.

பின்னர், கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளிலுள்ள சிறுவர்கள் முதல் வயதானவர்கள் வரை கபசுர குடிநீரை எத்தனை நாட்களுக்கு பயன்படுத்த வேண்டும் எனவும், பயன்படுத்தும் முறை மற்றும் பயன்படுத்த வேண்டிய அளவு குறித்து பொதுமக்களுக்கு விவரித்தார். முன்னதாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் பொதுமக்களுக்கு வழங்கப்பட்டன.

மேலும், கட்டுப்படுத்தபட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் மாநகராட்சி சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு கட்டுப்பாட்டு அறைகளை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு, தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வீடுகளுக்கே வரவழைத்து பெற்றுக் கொண்டு பாதுகாப்பாக இருக்குமாறும் மற்றும் தொற்று நோய் தடுப்பு பணிகளில் மாநகராட்சி நிர்வாகத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் ஆணையாளர் சதீஷ் கேட்டுக்கொண்டுள்ளார்.

நிகழ்ச்சியில் உதவி ஆணையாளர் மருதபாபு, மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் செல்வமூர்த்தி, உதவி மருத்துவ அலுவலர்கள் ராமு, குமார், சரவணன், உதவி பொறியாளர் செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்