ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் திருச்சியில் பஸ், ரெயில் நிலையங்கள் மீண்டும் வெறிச்சோடின

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் திருச்சியில் பஸ், ரெயில் நிலையங்கள் மீண்டும் வெறிச்சோடின.

Update: 2020-07-01 23:30 GMT
திருச்சி,

ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் திருச்சியில் பஸ், ரெயில் நிலையங்கள் மீண்டும் வெறிச்சோடின.

ஊரடங்கு நீட்டிப்பு

கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக தமிழகத்தில் 6-வது முறையாக ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இம்மாதம் இறுதி வரை ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் பஸ், ரெயில் போக்குவரத்தும் ரத்து செய்யப்பட்டு இருப்பதால் மக்கள் கடும் அவதி அடைந்து வருகிறார்கள்.

பொதுமக்களின் நலன் கருதி சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்கள் தவிர மற்ற பகுதிகளில் கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் பஸ் போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டு இருந்தது. மண்டலங்களுக்கு இடையே பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டு வந்தன. மேலும் திருச்சி வழியாக செங்கல்பட்டு, நாகர்கோவில், கோவை, மதுரை, மயிலாடுதுறை ஆகிய இடங்களுக்கு சிறப்பு ரெயில்களும் இயக்கப்பட்டு வந்தன. இதனால் மக்கள் இ-பாஸ் இல்லாமலேயே பஸ் மற்றும் ரெயில்களில் பயணித்து வந்தனர்.

மீண்டும் வெறிச்சோடின

இந்நிலையில் ஜூலை 1-ந்தேதி முதல் தமிழகம் முழுவதும் பஸ் போக்குவரத்தை ரத்து செய்து தமிழக அரசு அறிவிப்பினை வெளியிட்டது. இதன் காரணமாக நேற்று முன்தினம் இரவே பஸ்கள் பணிமனைக்கு திரும்பின. பஸ் போக்குவரத்து ரத்து செய்யப்பட்டதால் திருச்சி மத்திய பஸ் நிலையம், சத்திரம் பஸ் நிலையங்கள் நேற்று மீண்டும் வெறிச்சோடி காணப்பட்டன. டவுன் பஸ்களும் இயக்கப்படாததால் மக்கள் நடந்தே பல இடங்களுக்கு சென்றதை காண முடிந்தது.

திருச்சியில் இருந்து இயக்கப்பட்ட மற்றும் திருச்சி வழியாக சென்று கொண்டிருந்த ரெயில்களும் நேற்று முன்தினம் முதல் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இந்த ரெயில்கள் வருகிற 12-ந்தேதி வரை ரத்து செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரெயில்வே சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. இதன் காரணமாக திருச்சி ஜங்ஷன் ரெயில் நிலையமும் நேற்று வெறிச்சோடியது. ரெயில் நிலையம் மூடப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்