விபத்தில் பலியான விவசாயிக்கு கொரோனா: இறுதிச்சடங்கில் பங்கேற்ற கிராம மக்கள் பீதி

கும்மிடிப்பூண்டி அருகே விபத்தில் பலியான விவசாயியின் பிரேத பரிசோதனைக்கு முன்பாக எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியானது. இதனால் இறுதி சடங்கில் கலந்து கொண்ட கிராம மக்கள் பீதியடைந்து உள்ளனர்.

Update: 2020-07-01 23:48 GMT
கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த பாதிரிவேடு அருகே உள்ள கண்ணன்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 42). விவசாயி. இவர், கடந்த மாதம் 19-ந் தேதியன்று தாணிப்பூண்டி அருகே நடந்த சாலை விபத்தில் படுகாயம் அடைந்தார். இதனையடுத்து அவர் சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். சிகிச்சையின் போது, முதல் கட்ட பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது தெரியவந்தது. இந்நிலையில், கடந்த 29-ந் தேதி சிகிச்சை பலனின்றி முருகன் உயிரிழந்தார்.

இதையடுத்து பிரேத பரிசோதனையின் போது முருகனின் உடல் கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது. அதன் பின்னர் அவரது உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் நேற்று முன் தினம் கண்ணன்கோட்டையில் நடைபெற்ற அவரின் இறுதிச்சடங்கில் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே பிரேத பரிசோதனைக்கு முன்பாக எடுக்கப்பட்ட மருத்துவ பரிசோதனையில் விபத்தில் இறந்த முருகனுக்கு கொரோனா தொற்று இருந்தது நேற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, முருகனின் இறுதி சடங்கில் பங்கேற்ற கிராம மக்களுக்கு கொரோனா தொற்று உள்ளதா என்பதனை கண்டறியவும், பரவலை தடுக்கும் வகையிலும் கண்ணன்கோட்டை கிராமத்தை முழுமையாக முடக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதன் காரணமாக கிராமத்தின் முக்கிய சாலைகள் அடைக்கப்பட்டு, பாதிரிவேடு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.

மேலும் செய்திகள்