கோலார், சித்ரதுர்கா உள்பட 4 மாவட்டங்களில் உணவு பூங்கா திறக்க மத்திய அரசு அனுமதி மந்திரி பி.சி.பட்டீல் தகவல்

கோலார், சித்ரதுர்கா உள்பட 4 மாவட்டங்களில் உணவு பூங்கா திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக மந்திரி பி.சி.பட்டீல் கூறியுள்ளார்.

Update: 2020-07-03 22:30 GMT
பெங்களூரு, 

கோலார், சித்ரதுர்கா உள்பட 4 மாவட்டங்களில் உணவு பூங்கா திறக்க மத்திய அரசு அனுமதி வழங்கியிருப்பதாக மந்திரி பி.சி.பட்டீல் கூறியுள்ளார்.

மந்திரி பேட்டி

கர்நாடகத்தில் உணவு பூங்காக்களின் நிலை குறித்து விவசாயத்துறை மந்திரி பி.சி.பட்டீல் பெங்களூருவில் நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த கூட்டத்திற்கு பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

மத்திய அரசின் சுயசார்பு திட்டத்தின் கீழ் உணவு பூங்காக்களுக்கு ரூ.4 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதி ஒதுக்கீட்டின் நோக்கம் நிறைவேற வேண்டும். ஊரடங்கு காலத்தில் விவசாயிகள் தங்களின் பொருளாதார நிலையை நிர்வகிக்க உணவு உற்பத்தி மையங்கள் உதவியாக இருக்கும் என்று கருதப்பட்டது. இதுகுறித்து முதல்-மந்திரியின் கவனத்திற்கு கொண்டு சென்றோம்.

நிலம் ஒதுக்கீடு

தற்போது 4 உணவு பூங்காக்கள் செயல்பட்டு வருகின்றன. இதன் வளர்ச்சியை கண்டு பொதுமக்கள், இன்னும் பல உணவு பூங்காக்களை உருவாக்க ஆர்வம் காட்ட வேண்டும். இந்த உணவு பூங்காக்களுக்கு கர்நாடக அரசு எப்போதும் முதுகெலும்பு போல் துணை நிற்கும். உணவு பூங்காக்களை தொடங்கியதின் நோக்கம் நிறைவேறியே தீர வேண்டும்.

நிதி கிடைக்கவில்லை என்ற காரணத்தினால், அந்த உணவு பூங்காக்களை மேம்படுத்தாமல் இருப்பது சரியல்ல. சரியாக செயல்படாத உணவு பூங்காக்களின் உயர் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். உணவு பூங்காக்கள் அமைக்க குறைந்த விலையில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிலத்தை அதிகாரிகள் சரியான முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

4 மாவட்டங்களில் உணவு பூங்கா

உணவு பூங்காக்களை மேம்படுத்த தேவையான உதவிகளை அரசு செய்யும். சாலை உள்ளிட்ட வசதிகள் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது. விவசாயிகளுக்கு உதவும் நோக்கத்தில், அக்ரி ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் தொடங்கப்படும். 10-வது ஐந்தாண்டு திட்டத்தில் மத்திய அரசு, கர்நாடகத்தில் கோலார், சித்ரதுர்கா, பாகல்கோட்டை, கலபுரகி உள்ளிட்ட மாவட்டங்களில் உணவு பூங்கா திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

இவ்வாறு மந்திரி பி.சி.பட்டீல் கூறினார்.

மேலும் செய்திகள்