கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல்லில் கொரோனா ஊரடங்கால் வேலை இழந்த அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணம் கேட்டு ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2020-07-03 23:58 GMT
திண்டுக்கல், 

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் மற்றும் ஊரடங்கால் அமைப்புசாரா தொழிலாளர்கள் வேலைவாய்ப்பை இழந்து தவிக்கின்றனர். எனவே, அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு நிவாரணத்தொகையாக ரூ.7 ஆயிரத்து 500 வழங்க வேண்டும். மேலும் தொழிலாளர்களை பாதிக்கும் வகையில் தொழிலாளர் சட்டங்களை திருத்தம் செய்வதை கைவிட வேண்டும். வேலை நேரத்தை 12 மணி நேரமாக உயர்த்தக்கூடாது. கொரோனா தடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதாரத்துறையினருக்கு உரிய பாதுகாப்பு உபகரணங்கள் மற்றும் கொரோனாவால் இறந்த தொழிலாளர்களின் குடும்பத்துக்கு ரூ.50 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு, பல்வேறு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யூ. மாவட்ட செயலாளர் கே.ஆர்.கணேசன் தலைமை தாங்கினார். ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட தலைவர் ஜெயமணி, தொ.மு.ச. மாவட்ட செயலாளர் அழகர்சாமி உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

இதேபோல் திண்டுக்கல்-திருச்சி சாலையில் காட்டாஸ்பத்திரி அருகே சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் பிரபாகரன் தலைமையிலும், கன்னிவாடி பேரூராட்சி அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மாவட்ட பொருளாளர் தனசாமி தலைமையிலும், வத்தலக்குண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. மாவட்ட பொதுச்செயலாளர் அழகர்சாமி தலைமையிலும், சின்னாளபட்டி பேரூராட்சி அலுவலகம் முன்பு சி.ஐ.டி.யூ. ஒன்றிய அமைப்பாளர் வி.கே.முருகன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேலும் செய்திகள்