இன்று முழு ஊரடங்கு: மீன் மார்க்கெட்டுகளில் அலைமோதிய மக்கள் கூட்டம்

இன்று முழு ஊரடங்கையொட்டி கடலூரில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

Update: 2020-07-04 23:09 GMT
கடலூர்,

இன்று முழு ஊரடங்கையொட்டி கடலூரில் உள்ள மீன் மார்க்கெட்டுகளில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.

முழு ஊரடங்கு

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. தற்போது 6-வது கட்டமாக வருகிற 31-ந் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சில கட்டுப்பாடுகள், தளர்வுகளை அரசு அறிவித்துள்ளது.

அதில் கிராமப்புற வழிபாட்டு தலங்களை திறக்கவும், சென்னையை தவிர மற்ற பகுதிகளில் கடைகள் திறக்கும் நேரத்தை இரவு 8 மணி வரை அதிகரித்தும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகள் மட்டும் எந்தவிதமான தளர்வுகளும் இன்றி, தமிழகம் முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று அரசு அறிவித்துள்ளது.

மக்கள் கூட்டம்

அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) கடலூர் மாவட்டத்தில் பால், மருந்து கடைகளை தவிர பெட்ரோல் பங்க், காய்கறி கடைகள், மளிகை கடைகள், ஓட்டல்கள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டிருக்கும். அரசின் ஆணைப்படி இன்று அனைத்து கடைகளும் இயங்காது என்று வணிகர் சங்கத்தினரும் அறிவித்துள்ளனர்.

இதனால் கடலூர் மாவட்டத்தில் உள்ள மார்க்கெட்டுகள், கடைவீதிகளில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக நேற்று பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. அந்த வகையில் கடலூர் மஞ்சக்குப்பம் அண்ணா மைதானத்தில் உள்ள மார்க்கெட்டுகளில் காய்கறி உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வாங்க மக்கள் கூட்டம் அலைமோதியது.

மீன் மார்க்கெட்

இதேபோல் இன்று இறைச்சி கடைகளும் திறக்கப்படாது என்பதால், மீன் வாங்குவதற்காக பொதுமக்கள் நேற்று கடலூர் துறைமுகத்துக்கு படையெடுத்து சென்றனர். இதனால் கடலூர் துறைமுகம் பகுதியில் மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது. பின்னர் பொதுமக்கள், அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள மீன் மார்க்கெட்டுகளில் போட்டி போட்டுக் கொண்டு மீன்களை வாங்கி சென்றனர். மேலும் விழுப்புரம், அரியலூர் உள்ளிட்ட வெளிமாவட்டங்களில் இருந்து வந்த வியாபாரிகளும் மீன்களை அதிகளவில் வாங்கி, வாகனங்களில் ஏற்றிக்கொண்டு சென்றனர். இதேபோல் கடலூர் பான்பரி மார்க்கெட்டிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும் செய்திகள்