தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராதபடி பார்த்து கொள்ள வேண்டும் கலெக்டர் அறிவுறுத்தல்

தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தினார்.

Update: 2020-07-04 23:48 GMT
வேலூர், 

கொரோனா தொற்று நடவடிக்கையாக தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும் என வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் அறிவுறுத்தினார்.

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்று நடவடிக்கையாக வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியில் நடமாடுவதை கண்காணிப்பது தொடர்பாக ஆலோசனைக்கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் மாலதி, ஊரக வளர்ச்சித்துறை செயற்பொறியாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்துக்கு கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி பேசியதாவது:-

கண்காணிக்க வேண்டும்

வேலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த மாவட்டம் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. வெளிநாடு, பிற மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து வேலூருக்கு வருபவர்களை கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும். அவர்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டும்.

வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் வீடுகளிலேயே உள்ளனரா எனத் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். அவர்கள் வீட்டை விட்டு வெளியில் வராதபடி பார்த்துக் கொள்ள வேண்டும். தினமும் அந்தப் பகுதிகளில் கிருமிநாசினி தெளிக்க வேண்டும். கொரோனா தொற்று பரவாமல் தடுப்பதற்காக அந்தப் பகுதிகளில் துண்டு பிரசுரங்கள் வழங்கி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம்

கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட பகுதிகளில் கபசுர குடிநீர், நிலவேம்பு கசாயம் ஆகியவற்றை அங்கன்வாடி பணியாளர்கள் மூலம் தினமும் வீடு வீடாக வழங்க வேண்டும். அந்தப் பகுதி ஊராட்சி செயலாளர் மூலம் வைட்டமின் சி மாத்திரைகள் வழங்க வேண்டும். பொதுமக்கள் முகக் கவசம் கட்டாயம் அணிய வேண்டும். தேவையின்றி பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியில் வரக்கூடாது.

பொது இடங்களில் சமூக விலகலை கடைப்பிடிக்க வேண்டும். கைகளை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தினமும் கிருமிநாசினி தெளிக்கப்படுகிறதா? எனக் கண்காணிக்க வேண்டும். ஊரக வளர்ச்சித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 157 குளம், குட்டைகளை மாநில நிதிக்குழு மானியத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வரும் தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்