குடிபோதையில் வாலிபரை தாக்கிய 2 போலீசார் பணியிடை நீக்கம் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவு

பல்லடம் அருகேகுடிபோதையில் இருந்த 2 போலீசார் வாலிபரை அடித்து உதைத்தனர். இது குறித்த புகாரின் பேரில் 2 போலீசாரை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுஉள்ளார்.

Update: 2020-07-05 05:51 GMT
பல்லடம், 

திருப்பூர் மாவட்டம், பல்லடம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் உதயகுமார்(வயது 33). காமநாயக்கன்பாளையம் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் ரமேஷ்(30). பல்லடத்தை சேர்ந்தவர் சரவணன்(30). இவர்கள் 3 பேரும் நண்பர்கள்.

இந்த நிலையில் கடந்த 1-ந்தேதி பல்லடம் மகாலட்சுமி நகரில் உதயகுமார், ரமேஷ், சரவணன் ஆகிய 3 பேரும் மது குடித்து கொண்டு இருந்தனர். அப்போது நண்பர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த போலீஸ்காரர்கள் உதயகுமார், ரமேஷ் ஆகிய இருவரும் சேர்ந்து சரவணனை அடித்து உதைத்ததாக தெரிகிறது.

2 போலீசார் பணியிடை நீக்கம்

இதில் காயம் அடைந்த சரவணன் சிகிச்சைக்காக பல்லடம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தலிடம் புகார் தெரிவித்தார். பொது இடத்தில் போலீஸ்காரர்கள் ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் பொதுமக்கள் எப்படி போலீசாரை மதிப்பார்கள் என்று போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் சம்பந்தப்பட்ட போலீசாரை கண்டித்தார்.

அத்துடன் துறை ரீதியாக 2 போலீசாரையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இதையடுத்து அந்த 2 போலீசாரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த சம்பவம் பல்லடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்