பெரம்பலூர், அரியலூரில் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைப்பு சாலைகள் வெறிச்சோடியது

பெரம்பலூர், அரியலூரில் முழு ஊரடங்கையொட்டி கடைகள் அடைக்கப்பட்டன. மேலும் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது.

Update: 2020-07-06 04:34 GMT
பெரம்பலூர், 

தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும், கொரோனா பரவல் வேகத்தை கட்டுப்படுத்தமுடியவில்லை. இதனால் ஊரடங்கு உத்தரவு விதித்து, கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தமிழகத்தில் 6-ம் கட்ட ஊரடங்கு தற்போது அமலில் உள்ளது. இதில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஆனாலும் இந்த ஜூலை மாதம் முழுவதும் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்காக தமிழகம் முழுவதும் அமல்படுத்தப்படும் என்று தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

அதன்படி நேற்று ஜூலை மாதத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமை என்பதால் முழு ஊரடங்கு தமிழகம் முழுவதும் கடைப்பிடிக்கப்பட்டது. அதன்படி பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் தளர்வுகள் இல்லாத முழுமையான ஊரடங்கு நேற்று காலை 6 மணி முதல் இன்று (திங்கட்கிழமை) காலை 6 மணி வரை கடைப்பிடிக்கப்பட்டது.

கடைகள் மூடப்பட்டிருந்தன

முழு ஊரடங்கில் திறக்க அனுமதிக்கப்பட்ட பால் விற்பனை நிலையங்கள், மருந்தகங்கள், மருத்துவமனைகள் நேற்று வழக்கம் போல் இயங்கின. துய்மை பணியாளர்கள் நேற்று வழக்கம் போல் தூய்மை பணியில் ஈடுபட்டனர். முழு ஊரடங்கில் கடைகளில் திறந்து வியாபாரம் செய்தால், கடைகளுக்கு ‘சீல்‘ வைத்து, உரிமையாளர்கள் மீது குற்ற வழக்குப்பதிவு செய்யப்படும் என்று மாவட்ட நிர்வாகம் முன்னதாகவே எச்சரிக்கை விடுத்திருந்ததால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்கள் முழுவதும் உள்ள காய்கறி கடைகள், சிறிய, பெரிய மளிகை கடைகள், பழக்கடைகள், சூப்பர் மார்க்கெட்டுகள், ஓட்டல்கள், ஜவுளி கடைகள், டாஸ்மாக் கடைகள், இறைச்சி கடைகள் என அனைத்து கடைகளும் மூடப்பட்டிருந்தன.

இதனால் பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் பகுதிகளில் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. பெட்ரோல் விற்பனை நிலையங்களும் மூடப்பட்டன.

சாலைகள் வெறிச்சோடின

ஏற்கனவே பஸ் போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்ட சூழ்நிலையில், நேற்று முழு ஊரடங்கினால் வாகனங்கள் செல்லாததால் சாலைகள் அனைத்தும் வெறிச்சோடி காணப்பட்டது. மேலும் பெரம்பலூர்- அரியலூர் மாவட்ட எல்லைகளில் தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டு, அரசு பணி நிமித்தம் செல்லும் வாகனங்களை தவிர பிற வாகனங்கள் மாவட்டத்திற்குள் நுழைய அனுமதிக்கப்படாமல் இருக்க போலீசார் சோதனை பணியில் ஈடுபட்டனர்.

முழு ஊரடங்கு உத்தரவினால் மாவட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் தேவையில்லாமல் வீட்டை விட்டு வெளிவரவில்லை. அவர்களில் பலர் தங்களது வீடுகளில் குடும்பத்தினருடன் டி.வி.யில் செய்தி மற்றும் பொழுது போக்கு நிகழ்ச்சிகளை கண்டுகளித்தனர். இதனால் தெருக்களும் வெறிச்சோடி காணப்பட்டது. இளைஞர்கள் சிலர் கிரிக்கெட் விளையாடினர். ஏற்கனவே அத்தியாவசிய பொருட்களை முன்கூட்டியே வாங்கி வைத்திருந்ததால் பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை. விவசாயிகளில் சிலர் வழக்கம் போல் நேற்றும் தங்களது விவசாய பணிகளில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்