கொரோனா பரவல் காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கு நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுமா? சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம்

கொரோனா பரவல் காரணமாக மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கு நிதி உதவி கிடைப்பதில் தாமதம் ஏற்படுமா? என்பது தொடர்பாக சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் விளக்கம் அளித்தார்.

Update: 2020-07-07 02:25 GMT
திருப்பரங்குன்றம்,

மதுரை திருப்பரங்குன்றத்தை அடுத்த தோப்பூர் ஊராட்சி கோ.புதுப்பட்டியில் 199.24 ஏக்கர் பரப்பளவில் உலக தரத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.

இந்த மருத்துவமனை திட்டத்துக்காக கையகப்படுத்தப்பட்ட இடத்தை சுற்றி ரூ.5 கோடியில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த நிலையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் நேற்று எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை பார்வையிட்டு, சுற்றுச்சுவர் கட்டுமான பணியை ஆய்வு செய்தனர்.

பின்னர் சுகாதார துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மிகப்பெரிய மைல்கல்

கடந்த 3-ந் தேதி இந்திய அரசு அரசாணையில் மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. கொரோனா வைரஸ் தாக்கத்தின் காரணமாக சுற்றுச்சுவர் அமைக்கும் பணியில் சற்று தாமதம் ஏற்பட்டது. இருப்பினும் தற்போது வருவாய்த்துறை மூலம் சுற்றுச்சுவர் அமைக்கும் பணி வேகப்படுத்தப்பட்டு துரிதமாக நடந்து வருகிறது. ஜப்பானிய நிறுவனத்திடம் இருந்து நிதி பெறப்பட்டு எய்ம்ஸ் மருத்துவமனை அமையும். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைவது தமிழகத்திற்கே மிகப்பெரிய மைல்கல்.

இவ்வாறு அவர் கூறினார்.

தாமதம் ஏற்படுமா?

அப்போது, அவரிடம் “கொரோனா வைரஸ் பரவல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணிக்கு நிதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுமா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர், “தொடர்ந்து மத்திய அதிகாரிகளிடம் பேசி வருகிறோம். எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்காக தனியாக இயக்குனர் நியமிக்கப்படுவார். மத்திய குழு எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணியை தொடங்கும். இந்த மாதம் 31-ந் தேதிக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை பணிக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்காக உரிய பணி நடைபெற்று வருகிறது” என்றார்.

கொரோனா சிகிச்சை மையம்

இதை தொடர்ந்து, மதுரை தோப்பூரில் உள்ள கொரோனா சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அப்போது, மதுரை கலெக்டர் வினய், மதுரை அரசு மருத்துவமனை டீன் சங்குமணி, ஆஸ்டின்பட்டி நுரையீரல் சிகிச்சைக்கான அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் காந்திமதிநாதன் உள்பட மருத்துவ குழுவினர் உடன் இருந்தனர்.

மேலும் செய்திகள்