ஊரடங்கினால் வருமானம் பாதிப்பு: கடனை திருப்பி செலுத்த தனியார் நிதி நிறுவனங்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு

ஊரடங்கினால் வருமானம் பாதிப்பு அடைந்துள்ளதால் கடனை திருப்பி செலுத்த தனியார் நிதி நிறுவனங்கள் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

Update: 2020-07-07 05:59 GMT
பெரம்பலூர், 

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பெரம்பலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் போடுவதற்காக கலெக்டர் அலுவலகம் முன்பு பெட்டி வைக்கப்பட்டுள்ளது. அந்த பெட்டியில் கோரிக்கை மனுக்களை பொதுமக்கள் போட்டு விட்டு செல்கின்றனர். நேற்று திங்கட்கிழமை என்பதால் கலெக்டர் அலுவலக பெட்டியில் கோரிக்கை மனுக்கள் போட பொதுமக்கள் பலர் வந்தனர். அப்போது லாடபுரம் ஊராட்சியின் 11-வது வார்டு உறுப்பினர் சுரேஷ், இளைஞர்களுடன் வந்து பெட்டியில் போட்ட மனுவில், லாடபுரம் ஊராட்சிபுதுஆத்தூரில் உள்ள ஆற்றை ஊரக வளர்ச்சி துறையின் 100 நாள் வேலை திட்டம் மூலம் தூர்வாரப்பட்டது. ஆனால் அதில் ஒரு பகுதியை தொழிலாளர்களுக்கு தினமும் ஊதியமாக ரூ.230 வீதமும், லாடபுரம் ஆதிதிராவிட மக்களுக்கு குறைவாக தினமும் ரூ.210 வீதமும் வழங்கியுள்ளனர். எனவே அவர்களுக்கும் ரூ.230 ஊதியம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

5 மாதம் கால அவகாசம் அளிக்க வேண்டும்

கீழுமத்தூர் பூங்கா நகரை சேர்ந்த பெண்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் கலெக்டர் அலுவலகத்துக்கு திரண்டு வந்து பெட்டியில் மனு போட்டனர். அதில், கொரோனா ஊரடங்கினால் எங்களுக்கு வேலை ஏதும் கிடைக்காததால், வருமானமின்றி வீட்டிலேயே முடங்கியுள்ளோம். சாப்பாட்டிற்கு கஷ்டப்பட்டு வருகிறோம். ஆனால் எங்களுக்கு கடன் கொடுத்த பெரம்பலூர், குன்னம், வேப்பூர், அரியலூர், கடலூர் மாவட்டம் திட்டக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த தனியார் நிதி நிறுவனங்கள் கொடுத்த கடனை திரும்பி செலுத்துமாறு கட்டாயப்படுத்தி பணத்தை வசூலித்து வருகின்றனர். ஊரடங்கு இல்லையென்றால் வேலைக்கு சென்று கடனை செலுத்தி விடுவோம். எனவே கடனை திருப்பி செலுத்த தனியார் நிதி நிறுவனங்கள் எங்களுக்கு இன்னும் 5 மாதம் அவகாசம் அளிக்க கலெக்டர் உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பாலகுமார் கொடுத்த மனுவில், பெரம்பலூர் மாவட்டத்தில் போலீஸ் நண்பர் குழுவை நிரந்தரமாக தடை செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்