கொரோனா பாதிப்பு அறிக்கையில் உண்மைத்தன்மை இல்லை: பொன்முடி எம்.எல்.ஏ. குற்றச்சாட்டு

கொரோனா பாதிப்பு அறிக்கையில் உண்மைத்தன்மை இல்லை என்று பொன்முடி எம்.எல்.ஏ. குற்றம்சாட்டினார்.

Update: 2020-07-07 23:15 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையை தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் பொன்முடி, மாசிலாமணி ஆகியோர் சந்தித்து மனு கொடுத்தனர். அதன் பின்னர் பொன்முடி எம்.எல்.ஏ., நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க மாவட்ட நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பல்வேறு கிராமங்களில் உள்ள அரசு மருத்துவமனைகளில் சரிவர சிகிச்சை அளிப்பதில்லை என புகார்கள் வருகிறது. அதுமட்டுமின்றி தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளவர்களுக்கு குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லை என்றும், உணவு சரிவர வழங்கப்படுவதில்லை எனவும் தினசரி எங்களுக்கு தொலைபேசி மூலம் புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இவைகளை கலெக்டரிடம் எடுத்துக்கூறி உடனடியாக அடிப்படை வசதி மற்றும் பாதுகாப்பு வசதிகளை செய்து கொடுக்கவலியுறுத்தியுள்ளோம்.

குறிப்பாக கிராமப்புறங்களில் கொரோனா நோய் அதிகமாக பரவி வருவதால் அங்குள்ள அதிகாரிகளை அரசு ஊக்கப்படுத்தி விழிப்புணர்வுடன் நோய் தடுப்பு நடவடிக்கையில் செயல்பட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் விழுப்புரம் மாவட்டத்தில் எத்தனை பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர், எந்தெந்த இடங்களில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்கள் எத்தனை பேர், இதுவரை எத்தனை பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர் என்ற விவரங்களை அந்தந்த சட்டமன்ற தொகுதி உறுப்பினர்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறை வழங்க வேண்டுமென கலெக்டரிடம் வலியுறுத்தியுள்ளோம். அதற்கு அவரும் ஒப்படைப்பதாக கூறியுள்ளார்.

இன்றைக்கு நோய் பாதிப்பில் இந்தியாவிலேயே 2-ம் இடத்தில் தமிழகம் உள்ளது. தமிழக அரசின் கவனக்குறைவான நடவடிக்கையால்தான் கொரோனா பாதிப்பில் தமிழகம் 2-ம் இடத்திற்கு வந்துள்ளது. இந்நோய் தமிழகத்திற்கு வரவே, வராது என்றார்கள். சட்டமன்றத்திலும் பேசினார்கள். அவர்கள் பேசிய அளவிற்கு செயல்பாடுகள் இல்லை.

அதுபோல் கொரோனா பாதிப்பு தொடர்பான சுகாதாரத்துறை, மாநகராட்சி, அரசு வெளியிடும் அறிக்கையில் பாதிப்பு எண்ணிக்கை மாறி, மாறி இருக்கிறது. எனவே இந்த அறிக்கையில் உண்மைத்தன்மை இல்லை. நோய் தடுப்பு பணியில் ஈடுபடும் பணியாளர்களையும் ஊக்கப்படுத்தவில்லை, நோயால் பாதிக்கப்படுபவர்களுக்கு சரியான மருத்துவ சிகிச்சையும் கொடுப்பதில்லை. இதுதான் சுகாதாரத்துறையின் நிலைமை.

இதனால்தான் நகரங்கள், கிராமங்கள்தோறும் எவ்வளவு பேர் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை தெரிந்து அவர்களுக்கு எங்களால் முடிந்த உதவிகளை செய்வதற்காகத்தான், அதன் விவரங்களை மாவட்ட கலெக்டரிடம் கேட்டுள்ளோம். இ-பாஸ் வழங்கும் முறையை முறையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது மாவட்ட அவைத்தலைவர் புகழேந்தி, பொருளாளர் ஜனகராஜ், துணை செயலாளர் ஜெயச்சந்திரன் மற்றும் பலர் உடனிருந்தனர்.

மேலும் செய்திகள்