ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் கொரோனாவுக்கு பலி: மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்வு

பண்ருட்டியில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் பலியானார். இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் சாவு எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

Update: 2020-07-07 22:45 GMT
பண்ருட்டி, 

பண்ருட்டி லிங்க் ரோட்டில் வசித்து வந்தவர் 73 வயதான ஓய்வுபெற்ற வங்கி மேலாளர். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு சளி, காய்ச்சலால் பாதிக்கப்பட்டார். இதையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக பண்ருட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இருப்பினும் அவருக்கு காய்ச்சல் குணமாகாததால், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி மாநிலம் கிருமாம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரிடம் இருந்து உமிழ்நீர் எடுக்கப்பட்டு கொரோனா பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதன் பரிசோதனை முடிவில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் உள்ள தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்த நிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி ஓய்வுபெற்ற வங்கி மேலாளர் பரிதாபமாக உயிரிழந்தார். பின்னர் அவரது உடல் ஆம்புலன்ஸ் மூலம் பண்ருட்டியில் கெடிலம் ஆற்றின் அருகே உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதையடுத்து சுகாதாரத்துறையினர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் முன்னிலையில் ஓய்வுபெற்ற வங்கி மேலாளரின் உடல் பாதுகாப்பாக அடக்கம் செய்யப்பட்டது.

இதற்கிடையே கொரோனாவுக்கு பலியான ஓய்வுபெற்ற வங்கி மேலாளரின் குடும்பத்தை சேர்ந்த 3 பேர், கடலூர் அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து உமிழ்நீர் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கடலூர் மாவட்டத்தில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் செய்திகள்