கடலூர் மாவட்டத்தில் டாக்டர்கள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி உள்பட 64 பேருக்கு கொரோனா

கடலூர் மாவட்டத்தில் டாக்டர்கள், ஊரக வளர்ச்சித்துறை அதிகாரி உள்பட 64 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. மேலும் கூடுதல் கலெக்டர் ராஜகோபால் சுங்கரா தனிமைப்படுத்திக்கொண்டார்.

Update: 2020-07-07 23:30 GMT
கடலூர், 

கடலூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 1,315 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்நிலையில் நேற்று சிலரது உமிழ்நீர் பரிசோதனை முடிவு வெளியானது. இதில் 64 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியானது. இவர்களில் கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அதிகாரி, டிரைவர் உள்பட 7 பேர் அடங்குவர். இவர்களுக்கு விருத்தாசலத்தை சேர்ந்த ஊரக வளர்ச்சித்துறை ஊழியர் ஒருவர் மூலம் பரவி உள்ளது. அவர் சமீபத்தில் ஊரக வளர்ச்சி முகமை அலுவலகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றார்.

அதன்பிறகு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில், தொற்று இருப்பது உறுதியானது. அவருடன் பணியாற்றிய மேலும் 4 பேருக்கும் உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து அவருடன் தொடர்பில் இருந்த கூடுதல் கலெக்டரும், மாவட்ட திட்ட இயக்குனருமான ராஜகோபால் சுங்கரா, அவரது அலுவலகத்தில் பணியாற்றிய கண்காணிப்பாளர், டிரைவர் உள்பட அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது.

இதில் கண்காணிப்பாளர் உள்பட 7 பேருக்கு கொரோனா உறுதியானது. கூடுதல் கலெக்டருக்கு பாதிப்பு இல்லை. இருப்பினும் அவர் தன்னை தானே தனிமைப்படுத்திக்கொண்டார். இதையடுத்து கொரோனா பாதிக்கப்பட்ட 7 பேரையும் நேற்று சுகாதாரத்துறையினர் கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதேபோல் விருத்தாசலத்தை சேர்ந்த 5 பேர் சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இது தவிர சிதம்பரத்தை சேர்ந்த 2 டாக்டர்கள், கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த கர்ப்பிணி, சென்னையில் இருந்து கம்மாபுரம், கீரப்பாளையம், கடலூர், நெய்வேலிக்கு வந்த 7 பேர், செங்கல்பட்டில் இருந்து கம்மாபுரம், கிருஷ்ணாபுரம் வந்த 2 பேர், பெங்களூருவில் இருந்து கம்மாபுரம், நெய்வேலி வந்த 2 பேர், கொரோனா அறிகுறியுடன் சிதம்பரத்தில் அனுமதிக்கப்பட்ட விருத்தாசலத்தை சேர்ந்த 6 பேர், கடலூரில் உள்ள ஒருவர், கம்மாபுரம், காட்டுமன்னார்கோவில் பகுதியை சேர்ந்த 2 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்த விருத்தாசலம், பண்ருட்டி, கம்மாபுரம், கிருஷ்ணாபுரம், காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், கடலூர் பகுதியை சேர்ந்த 29 பேருக்கும் பாதிப்பு உறுதியானது. நேற்று மட்டும் கடலூரை சேர்ந்த 29 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் மாவட்டத்தில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,379 ஆக உயர்ந்தது.

மேலும் செய்திகள்