மும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் ரூ.705 கோடி மோசடி நடந்ததாக வழக்கு - அமலாக்கத்துறை நடவடிக்கை

மும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் ரூ.705 கோடி மோசடியில் ஈடுபட்டதாக ஜி.வி.கே. உள்ளிட்ட நிறுவனங்கள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்து உள்ளது.

Update: 2020-07-07 23:39 GMT
மும்பை, 

மும்பை சர்வதேச விமான நிலையத்தை ஜி.வி.கே. நிறுவனம் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் மும்பை விமான நிலைய மேம்பாட்டு பணிகளில் முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்து உள்ளது.

இந்த முறைகேடு தொடர்பாக ஏற்கனவே சி.பி.ஐ. மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவன (எம்.ஐ.ஏ.எல்.) இயக்குனரும், ஜி.வி.கே. நிறுவன அதிபருமான குணபதி, அவரது மகனும் மும்பை விமான நிலைய நிறுவன மேலாண்மை இயக்குனரான சஞ்சய் ரெட்டி, ஜி.வி.கே. நிறுவனம், மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனம் மற்றும் 9 தனியார் நிறுவனங்கள் மீது வழக்குப்பதிவு செய்து இருந்தது.

கடந்த 2006-ம் ஆண்டு இந்திய விமான நிலைய ஆணையம், மும்பை விமான நிலையத்தை நவீனமயமாக்குவது, பராமரிப்பது, செயல்படுத்துவது தொடர்பாக மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டது. இந்த ஒப்பந்தத்தை தவறாக பயன்படுத்தி தான் மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனம், ஜி.வி.கே. நிறுவனமும் மோசடியில் ஈடுபட்டுள்ளது.

மும்பை சர்வதேச விமான நிலைய நிறுவனம் விமான நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் செய்ததாக ரூ.310 கோடி அளவிலும், ஜி.வி.கே. நிறுவனம் விமான நிலைய பகுதிகளை அவர்களின் குடும்பத்தினர், உறவினர்களுக்கு குறைந்த விலைக்கு கொடுத்து ரூ.395 கோடி வரை முறைகேட்டில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு உள்ளது. இந்தநிலையில் சி.பி.ஐ. வழக்கை அடிப்படையாக வைத்து அமலாக்கத்துறை ரூ.705 கோடி மோசடியில் ஈடுபட்டதாக ஜி.வி.கே. நிறுவனம், மும்பை சர்வதேச விமான நிறுவனம் மற்றும் முறைகேட்டிற்கு உடந்தையாக இருந்த நிறுவனங்கள் மீது பணமோசடி வழக்குப்பதிவு செய்து உள்ளது.

மேலும் செய்திகள்