மும்பையில் 3,520 படுக்கைகளுடன் புதிதாக 5 கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரிகள்: உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார்

கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 86,509 ஆக உயர்ந்துள்ள நிலையில், மும்பையில் 3,520 படுக்கைகளுடன் புதிதாக 5 கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரிகளை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று திறந்து வைத்தார்.

Update: 2020-07-08 00:30 GMT
மும்பை, 

மும்பை முல்லுண்டு பகுதியில் 1700 படுக்கைகளுடன் அமைக்கப்பட்ட கொரோனா சிகிச்சை மையத்தை படத்தில் காணலாம். இதை முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே நேற்று திறந்து வைத்தார்.

நாட்டின் மற்ற நகரங்களை விட மும்பை நகரம் தான் கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இதுவரை 86 ஆயிரத்து 509 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் நேற்று இங்கு புதிதாக 785 பேருக்கு நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. கடந்த சில நாட்களில் குறைந்தபட்ச பாதிப்பு இதுவாகும்.

இதேபோல நகரில் மேலும் 64 பேர் பலியானார்கள். இதனால் மும்பையில் ஆட்கொல்லி நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை 5 ஆயிரத்தை தாண்டி உள்ளது. இதுவரை இங்கு 5 ஆயிரத்து 2 பேர் உயிரிழந்து உள்ளனர்.

மும்பையில் இதுவரை 58 ஆயிரத்து 137 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 23 ஆயிரத்து 359 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அதே நேரத்தில் மும்பையில் குணமடைந்தோர் விகிதம் 67 சதவீதமாக அதிகரித்து உள்ளது. கொரோனா பரவல் இரட்டிப்பு விகிதம் 44 நாட்களாக உயர்ந்து உள்ளது.

ஆனால் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கைகள் கிடைக்கவில்லை என்று புகார்கள் எழுகின்றன. இதனால் மாநில அரசும், மும்பை மாநகராட்சியும் படுக்கை வசதிகளை அதிகரிப்பதில் மும்முரம் காட்டி வருகின்றன.

இந்தநிலையில், கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதற்காக முல்லுண்டு, தகிசர் கிழக்கு, தசிசர் மேற்கு, மகாலட்சுமி ரேஸ்கோர்ஸ் மற்றும் பாந்திரா குர்லா காம்ப்ளக்ஸ் ஆகிய 5 இடங்களில் புதிதாக தற்காலிக ஆஸ்பத்திரிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் 3 ஆயிரத்து 520 படுக்கை வசதிகள் உள்ளன.

இதன்படி முல்லுண்டில் மாநில அரசின் சிட்கோ 1,700 படுக்கைகளை கொண்ட கொரோனா சிகிச்சை ஆஸ்பத்திரியையும், தகிசர் கிழக்கில் மும்பை மெட்ரோ உதவியுடன் 900 படுக்கைகள் வசதியுடன் ஆஸ்பத்திரியும், தகிசர் மேற்கில் 108, மகாலட்சுமி ரேஷ்கோர்சில் 700, பாந்திரா குர்லா காம்ப்ளக்சில் மும்பை பெருநகர வளர்ச்சிக்குழுமம் சார்பில் 112 அவசர சிகிச்சை படுக்கைகளை கொண்ட ஆஸ்பத்திரியும் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய கொரோனா ஆஸ்பத்திரிகளை நேற்று வீடியோ கான்பரன்சிங் மூலம் நடந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே திறந்து வைத்தார்.

இதற்கிடையே மும்பையில் கொரோனா தொற்று பரவல் சங்கிலியை உடைக்க மாநகராட்சியினர் நோய் பாதித்தவர்களுடன் தொடர்பில் இருந்தவா்களை கண்டறிந்து தனிமைப்படுத்தி வருகின்றனர். மாநகராட்சி இதற்காக பள்ளிகள், ஓட்டல்கள், தங்கும் விடுதிகள், அரங்குகள், மண்டபங்களை கையகப்படுத்தி உள்ளது.

இந்தநிலையில் மும்பையில் இதுவரை 15 லட்சம் பேர் தனிமைப்படுத்தப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்து உள்ளது.

இது குறித்து மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மும்பையில் 13 லட்சத்து 28 ஆயிரம் பேர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தனர். தற்போது 2 லட்சத்து 46 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். இதில் 14 ஆயிரத்து 288 பேர் தனிமை மையங்களில் வைக்கப்பட்டுள்ளனர். மற்றவா்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்” என கூறப்பட்டுள்ளது.

மும்பையில் இதுவரை 6 ஆயிரத்து 552 கட்டிடங்களும், 750 குடிசைப்பகுதிகளும் கொரோனா பரவலை தடுக்க ‘சீல்’ வைக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்