தொடர் நடவடிக்கைகள் காரணமாக சென்னையில், கொரோனா தொற்றின் பாதிப்பு 18.2 சதவீதமாக குறைந்துள்ளது உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தகவல்

‘தமிழக முதல்-அமைச்சரின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக சென்னையில், கொரோனா தொற்றின் பாதிப்பு 18.2 சதவீதமாக குறைந்துள்ளது’ என உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-08 23:15 GMT
சென்னை,

தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் சார்பில் கொரோனா வைரஸ் தொற்று தொடர்பாக மேற்கொள்ளப்பட்டு வரும் தடுப்பு, பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் வளர்ச்சி பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடந்தது.

இந்த கூட்டத்தில் கூடுதல் தலைமை செயலாளர்கள் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஹர்மந்தர் சிங், மாநகராட்சி கமிஷனர் ஜி.பிரகாஷ், நகராட்சி நிர்வாக ஆணையர் கா.பாஸ்கரன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய மேலாண்மை இயக்குனர் சி.என்.மகேஸ்வரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை இயக்குனர் கே.எஸ்.பழனிசாமி, பேரூராட்சிகளின் இயக்குனர் எஸ்.பழனிசாமி, தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் ஜெ.யு.சந்திரகலா உள்பட அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:-

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில், கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பாக பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 12 ஆயிரம் பணியாளர்கள் மூலமாகவும் சென்னையில் உள்ள சுமார் 12 லட்சம் வீடுகளுக்கு தினமும் சென்று மக்களுக்கு காய்ச்சல், சளி, இருமல் பிரச்சினைகள் இருக்கிறதா? என கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது.

தமிழக முதல்-அமைச்சரின் தொடர் நடவடிக்கைகள் காரணமாக ஜூன் மாதத்தில் 24.2 சதவீதமாக இருந்த நோய்த்தொற்று, ஜூலை மாதத்தில் 18.2 சதவீதமாக குறைந்துள்ளது. குறிப்பாக கடந்த 7-ந்தேதி மட்டும் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 10 ஆயிரத்து 139 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதில் 1,203 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. இது 11.87 சதவீதம் ஆகும். தமிழக முதல்-அமைச்சரின் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் தொடர் கண்காணிப்பின் காரணமாக பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொற்று கட்டுப்படுத்தப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

அதனைத்தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி, நகராட்சி நிர்வாக ஆணையரகம், ஊரக வளர்ச்சித்துறை, சென்னை குடிநீர் வாரியம், தமிழ்நாடு குடிநீர் வாரியம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் திட்டப்பணிகள் குறித்து கேட்டறிந்ததுடன், அப்பணிகளை விரைவாக முடிக்கவும் அதிகாரிகளுக்கு அமைச்சர் எஸ்.பி. வேலுமணி உத்தரவிட்டார்.

மேற்கண்ட தகவல் பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும் செய்திகள்