தரங்கம்பாடியில், இன்று சுருக்குமடி, இரட்டைமடி வலை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம்

தரங்கம்பாடியில், இன்று(வெள்ளிக்கிழமை) சுருக்குமடி, இரட்டைமடி வலை பயன்படுத்துவதை தடுக்கக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்துவது என மீனவர்கள் கூட்டமைப்பு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2020-07-10 01:43 GMT
பொறையாறு,

தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலை மற்றும் அதிவேக என்ஜின் பொருத்தப்பட்ட விசைப்படகுகள் மூலம் கடலுக்கு சென்று மீன்பிடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். இந்தநிலையில் நேற்றுமுன்தினம் தரங்கம்பாடியை சேர்ந்த மீனவர் சுதர்மேன் என்பவர் தனக்கு சொந்தமான சிறிய வகை பைபர் படகில் 6 பேருடன் சேர்ந்து மீன்பிடித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பெரிய விசைப்படகில் காரைக்கால் பகுதியை சேர்ந்த மீனவர்கள் தரங்கம்பாடி மீனவர்கள் விரித்த வலையில் அருகே சுருக்குமடி வலையை வீசியதாக கூறப்படுகிறது. இதை தட்டிக்கேட்ட தரங்கம்பாடி மீனவர்கள் 7 பேரும் தாக்கப்பட்டனர்.

இதன் எதிரொலியாக தரங்கம்பாடி-சீர்காழி ஆகிய தாலுகாக்களை சேர்ந்த மீனவர்கள் கூட்டமைப்பு சார்பில் அவசர ஆலோசனை கூட்டம் தரங்கம்பாடியில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு தரங்கம்பாடி மீனவ பஞ்சாயத்தார்கள் தலைமை தாங்கினர். சீர்காழி தாலுகா பகுதி மீனவ பஞ்சாயத்தார்கள் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன:-

அரசால் தடை செய்யப்பட்ட சுருக்குமடி, இரட்டைமடி வலை மற்றும் அதிவேக என்ஜின் பயன்படுத்துவதை தடுக்கக்கோரி தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்த மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க செல்லாமல் தரங்கம்பாடியில் இன்று(வெள்ளிக்கிழமை) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுவது.

தரங்கம்பாடி மீனவர்களை தாக்கிய, சுருக்குமடி வலைகளை பயன்படுத்தும் காரைக்கால் மாவட்ட மீனவர்களிடம் தரங்கம்பாடி, சீர்காழி ஆகிய தாலுகா பகுதிகளை சேர்ந்த மீன் வியாபாரிகள் மீன் வாங்கக்கூடாது. இதுகுறித்து அரசு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்வது என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தரங்கம்பாடி, குட்டியாண்டியூர், வெள்ளக்கோவில், பெருமாள்பேட்டை, புதுப்பேட்டை, தாழம்பேட்டை, சின்னங்குடி, சின்னமேடு, கொடியம்பாளையம், பழையாறு, சின்னகொட்டாய்மேடு, கூழையாறு, தொடுவாய், கீழமூவர்க்கரை, மேலமூவர்க்கரை, சாவடிக்குப்பம், நாயக்கர்குப்பம், மடத்துகுப்பம், புதுக்குப்பம், வானகிரி ஆகிய 20 மீனவ கிராமங்களை சேர்ந்த பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்