காஞ்சீபுரத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா

காஞ்சீபுரத்தில் 2 சப்-இன்ஸ்பெக்டர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

Update: 2020-07-11 00:34 GMT
காஞ்சீபுரம், 

காஞ்சீபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் தனிப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணிபுரியும் 2 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்ட தனிபிரிவு போலீஸ் அலுவலகம் மூடப்பட்டது. அதே அலுவலகத்தில் 2-வது மாடியில் அலுவலகம் தற்காலிகமாக இயங்கி வருகிறது.

மேலும் காஞ்சீபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டரும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

புதுச்சேரியை சேர்ந்த 39 வயது ஆண் ஒருவர் காஞ்சீபுரம் மாவட்டம் சென்னகுப்பம் ஊராட்சி பகுதியில் தங்கி ஒரகடத்தில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். அவருக்கு தொற்று இருப்பது உறுதியானது.

இவர்களுடன் காஞ்சீபுரம் மாவட்டத்தில் நேற்று ஒரே நாளில் 61 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரையில் 3 ஆயிரத்து 99 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் 1,260 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 1,797 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 42 பேர் இறந்துள்ளனர்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் உள்ள அருள்நகர் பகுதியில் வசிக்கும் ஒரே குடும்பத்தை சேர்ந்த 45 வயது பெண், 70 வயது மூதாட்டி, 80 வயது முதியவர், மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த 24 வாலிபர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இவர்களுடன் செங்கல்பட்டு மாவட்டத்தில் நேற்று 242 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் இதுவரை பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 7,635 ஆக உயர்ந்தது. இவர்களில் 4,355 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். நேற்று 7 பேர் உயிரிழந்தனர். இதனால் பலியானவர்களின் எண்ணிக்கை 152 ஆக உயர்ந்தது.

திருவள்ளூர் மாவட்டம்

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், ஆரணி மல்லியங்குப்பம் ஊராட்சி, வேலன் தெருவில் வசித்து வரும் 38 வயது வாலிபர், ஆரணி பெருமாள் குப்பம் பகுதியில் 55 வயது ஆண் உள்பட 4 பேர், பெரியபாளையம் பஜார் தெருவில் 34 வயது பெண், பாளையக்கார தெருவில் வசித்து வரும் 32 வயது வாலிபர், எம்.கே.பி. நகரில் வசித்து வரும் 52 வயது பெண் ஆகியோர் கொரோனா பாதிப்புக்குள்ளாயினர்.

கடம்பத்தூர் ஒன்றியத்தில் 60 வயது முதியவர் உள்பட 3 பேர் என நேற்று ஒரே நாளில் திருவள்ளூர் மாவட்டத்தில் 219 பேர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டனர். மாவட்டத்தில் இதுவரையில் 6 ஆயிரத்து 75 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 3,736 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பினர். 2,221 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். 118 பேர் பலியாகி உள்ளனர்.

மேலும் செய்திகள்