கர்ப்பிணி மர்மச்சாவு: மாமனார், மாமியாரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலைமறியல்

கர்ப்பிணி மர்மச்சாவில் மாமனார், மாமியாரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-11 23:49 GMT
செங்கம், 

கர்ப்பிணி மர்மச்சாவில் மாமனார், மாமியாரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மர்மச்சாவு

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் அருகே உள்ள மேல்பள்ளிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தசரதன் என்ற மணிகண்டன் (வயது 35). இவரது மனைவி ஷோபனா (28). 8 மாத கர்ப்பிணியாக இருந்த ஷோபனா நேற்று முன்தினம் இரவு மர்மமான முறையில் இறந்தார்.

அவரது சாவில் மர்மம் உள்ளதாகவும், எனவே அவரது கணவர் மற்றும் மாமனார் ராஜாமணி, மாமியார் முனியம்மாள் ஆகியோரை கைது செய்ய வேண்டும் என்று கூறி பிரேத பரிசோதனைக்கு உடலை எடுத்துச் செல்ல விடாமல் ஷோபனாவின் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் செய்தனர்.

இதைத்தொடர்ந்து மணிகண்டன் மற்றும் இதில் தொடர்புடைய அவரது உறவினர் ராமகிருஷ்ணன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் தலைமறைவான ஷோபனாவின் மாமனார் ராஜாமணி மற்றும் மாமியார் முனியம்மாள் ஆகியோரை போலீசார் தேடி வந்தனர்.

சாலை மறியல்

இந்தநிலையில் நேற்று காலை ஷோபனாவின் மாமனார் மற்றும் மாமியாரை கைது செய்ய வேண்டும் என்று கூறி ஷோபனாவின் உறவினர்கள் செங்கம் நீப்பத்துறை மெயின் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதைத்தொடர்ந்து செங்கம் துணை போலீஸ் சூப்பிரண்டு சின்னராஜ், இன்ஸ்பெக்டர்கள் மலர், சாலமன்ராஜா மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் தலைமறைவாக இருந்த ஷோபனாவின் மாமனாரை போலீசார் கைது செய்தனர். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சுமார் 5 மணி நேரத்திற்கு மேலாக இந்த சாலை மறியல் நீடித்ததால் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

மேலும் செய்திகள்