தொழில் மீதான பக்தியால கேமரா வடிவில் வீடு கட்டிய புகைப்பட கலைஞர் - மகன்களுக்கும் கேமரா நிறுவனங்களின் பெயரை வைத்தார்

பெலகாவியில், தொழில் மீதான பக்தியால் கேமரா வடிவில் வீடு கட்டிய புகைப்பட கலைஞர் தனது மகன்களுக்கும் கேமரா நிறுவனங்களின் பெயரை வைத்து அசத்தியுள்ளார்.

Update: 2020-07-14 22:30 GMT
பெலகாவி, 

பொதுவாக புதிதாக வீடு கட்டுபவர்களுக்கு பல ரசனைகள் மனதில் இருக்கும். தங்களது வீடுகளை அழகான வடிவிலும், பார்ப்பவர்கள் ரசிக்கும் வகையிலும், கலைநயத்துடனும் கட்ட வேண்டும் என்ற எண்ணம் அனைவருக்கும் எழுவது உண்டு. சிலர் வீடுகளை கட்டும் போதும் அருகேயே நின்று அப்படி கட்டுங்கள், இப்படி கட்டுங்கள் என்று கட்டிட காண்டிராக்டர்களுக்கு ஆலோசனை கூறுவதையும் நாம் கண்கூட பார்த்து இருப்போம்.

இந்த நிலையில் ஒரு புகைப்பட கலைஞர் தனது வீட்டை கேமரா வடிவில் கட்டி அசத்தி பலரது கவனத்தையும் ஈர்த்து உள்ளார். இதுபற்றிய விவரம் வருமாறு:-

கர்நாடக-மராட்டிய மாநில எல்லையில் அமைந்து உள்ள பெலகாவி(மாவட்டம்) டவுனை சேர்ந்தவர் ரவி ஒங்கலே(வயது 49). இவர் புகைப்பட கலைஞராக பணியாற்றி வருகிறார். மேலும் சொந்தமாக ஸ்டூடியோவும் வைத்து நடத்தி வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி மனைவி, 3 மகன்கள் உள்ளனர்.

சிறுவயதில் இருந்தே புகைப்படம் எடுப்பதில் ரவி ஒங்கலே அதீத ஆர்வம் உடையவர். அவர் தான் எடுக்கும் புகைப்படங்களை ரசனையுடன் எடுப்பதில் வல்லவர். இதனால் திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளுக்கு ரவி ஒங்கலேயை, பெலகாவி டவுன் பகுதி மக்கள் அழைத்து செல்வார்கள். இந்த நிலையில் பெலகாவி டவுன் பகுதியில் ரவி ஒங்கலே புதிதாக ஒரு வீடு கட்ட விரும்பினார். அப்போது ரவி ஒங்கலேவுக்கு ஒரு எண்ணம் தோன்றியது. அதாவது தனது வீட்டை கேமரா வடிவில் கட்ட வேண்டும் என்று நினைத்தார். அதன்படி தற்போது கேமரா வடிவில் வீடு கட்டி அசத்தி உள்ளார்.

கேமரா வடிவில் கட்டப்பட்ட இந்த வீட்டின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த பலரும் ரவி ஒங்கலேவை வெகுவாக பாராட்டி வருகின்றனர். இதுகுறித்து ரவி ஒங்கலே கூறும்போது, சிறு வயதில் இருந்தே புகைப்படம் எடுத்து வருகிறேன். புகைப்படம் எடுக்கும் தொழில் செய்து தான் தற்போது நான் நல்ல நிலையில் உள்ளேன். தொழில் மீதான பக்தி மற்றும் என்னை பெரிய ஆளாக்கிய கேமராவுக்கு பெருமை சேர்க்க வேண்டும் என்று நினைத்து இருந்தேன். அப்போது எனது எண்ணத்தில் கேமரா வடிவில் வீடு கட்ட வேண்டும் என்று தோன்றியது.

இதுகுறித்து நான் கட்டிட காண்டிராக்டரிடம் தெரிவித்தேன். அவரும் இதற்கு சம்மதம் தெரிவித்தார். இதையடுத்து வீடு கட்டும் பணிகளை நான் அருகிலேயே நின்று கவனித்தேன். வீட்டின் முகப்பில் லேன்ஸ், பிளாஸ், பொத்தான் வடிவில் வைத்து உள்ளேன். எனது வீட்டை அனைவரும் ஆச்சரியத்துடன், வியப்புடன் பார்த்து செல்கின்றனர். மேலும் இந்த வீட்டை கட்டி முடிக்க எனக்கு ரூ.71 லட்சத்து 63 ஆயிரம் செலவு ஆனது.

என்னை வாழ வைத்த கேமராவுக்கு கவுரவம் அளிக்கும் வகையில் எனது மகன்கள் 3 பேருக்கும் கேமரா நிறுவனங்களின் பெயரான கேனான், நிகான், எப்சான் என பெயர் சூட்டி உள்ளேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்