கொரோனாவுக்கு 2 பேர் உயிரிழப்பு; கலெக்டரின் தனி உதவியாளர்கள் உள்பட 46 பேர் பாதிப்பு

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனாவுக்கு 2 பேர் பலியாகி உள்ளனர். கலெக்டரின் தனி உதவியாளர்கள் உள்பட 46 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2020-07-14 23:23 GMT
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா தாக்கம் தீவிரமாக உள்ளது. திண்டுக்கல்லை சேர்ந்த 56 வயது தொழிலாளி மற்றும் 46 வயது தொழிலாளி ஆகிய 2 பேர் மூச்சுத்திணறல் உள்ளிட்ட உடல்நலக்குறைவு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் நேற்று முன்தினம் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி பரிதாபமாக இறந்தனர்.

முன்னதாக அவர்களுக்கு நடத்திய பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது தெரியவந்தது. இதன்மூலம் கொரோனாவால் இறந்தவர்களின் எண்ணிக்கை 41 ஆக உயர்ந்தது.

இதனிடையே திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கொரோனா பாதித்த பகுதிகளில் வசிப்பவர்கள், பாதிக்கப்பட்ட நபர்களுடன் தொடர்பில் இருந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. அந்தவகையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கலெக்டர் அலுவலக கார் டிரைவருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

இதையடுத்து கலெக்டர் அலுவலக ஊழியர்களுக்கு பரிசோதனை நடத்தப்பட்டது. அதில் கலெக்டரின் தனி உதவியாளர்கள் 2 பேர், அலுவலக உதவியாளர்கள் 2 பேர், 1 டிரைவர், 1 தட்டச்சர் ஆகியோருக்கு நேற்று தொற்று கண்டறியப்பட்டது.

இதேபோல் கோபால்பட்டி அரசு மருத்துவமனையில் பணியாற்றிய செவிலியர்கள் உள்பட 10 பேருக்கும், குஜிலியம்பாறை பகுதியில் தூய்மை பணியாளர்கள் உள்பட 16 பேருக்கும், திண்டுக்கல்லில் ஒரே பகுதியை சேர்ந்த 10 பேருக்கும், வடமதுரை பகுதியில் 2 டாக்டர்கள், 2 செவிலியர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதன்மூலம் நேற்று 46 பேருக்கு நேற்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டது.

பழனி காந்தி மார்க்கெட்டில் மளிகை கடை நடத்திவரும் வியாபாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. இதன் காரணமாக காந்தி மார்க்கெட்டை இன்று(புதன்கிழமை) முழுமையாக அடைக்க நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக பழனி காந்தி ரோட்டில் உள்ள பட்டத்து விநாயகர் கோவிலில் இருந்து பைபாஸ் ரவுண்டானா வரை உள்ள அனைத்து கடைகளும் இன்று ஒரு நாள் முழுமையாக அடைக்கப்படுகிறது. காந்தி மார்க்கெட் முழுவதும் கிருமி நாசினி தெளித்த பிறகு மீண்டும் கடைகள் திறக்கப்படும் என சுகாதாரத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே திண்டுக்கல் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டருக்கு நேற்று முன்தினம் கொரோனா தொற்று இருப்பது தெரியவந்தது. இதனால் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் அனைவருக்கும் பரிசோதனை செய்யப்படுகிறது. இதையொட்டி போலீஸ் நிலையத்தில் கிருமிநாசினி மருந்து தெளிக்கப்பட்டு, பூட்டப்பட்டது.

மேலும் செய்திகள்