பெரம்பலூர் பெரிய ஏரியில் கொட்டப்படும் கட்டிட கழிவுகள் தூர்வார - விவசாயிகள் கோரிக்கை

பெரம்பலூரில் உள்ள பெரிய ஏரி முட்காடுகளாகவும், கட்டிட கழிவுகள் கொட்டும் இடமாகவும் மாறிவருவதால் ஏரியை தூர்வாரி நீர்வரத்து வாய்க்கால்களை சுத்தப்படுத்துமாறு பொதுப்பணித்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2020-07-15 02:32 GMT
பெரம்பலூர்,

பெரம்பலூர் துறையூர் சாலையில் அரசு மருத்துவமனை மற்றும் அரசு மேல்நிலைப்பள்ளி அருகே பெரியஏரி உள்ளது. கோனேரி ஆற்றில் இருந்து ஜார்ஜ் வாய்க்கால் வழியாகவும், அரணாரை செல்லியம்மன், நீலியம்மன் ஏரியில் இருந்தும் பெரம்பலூர் பெரிய ஏரி நீர்வரத்தை பெறுகிறது. பழமையான இந்த ஏரிக்கு நீர்வரத்து ஜார்ஜ் வாய்க்கால் தூர்ந்துபோய்விட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் கிராமப்புறங்களில் உள்ள ஏரிகள் தமிழக அரசின் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூர்வாரி சீரமைக்கப்பட்டுள்ளது.

பெரம்பலூர் நகராட்சி பகுதியில் இந்த திட்டத்தை செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்து, அரணாரை ஏரி, பெரம்பலூர் பெரியஏரி, வெள்ளந்தாங்கிஅம்மன் ஏரி (சிறிய ஏரி) ஆகியவற்றின் நீர்வரத்து வாய்க்கால்களை தூர்வாரி சீரமைக்க வேண்டும் என்று பெரம்பலூர் நகர் மற்றும் புறநகரை சேர்ந்த விவசாயிகள் தமிழக அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பெரம்பலூர் பெரிய ஏரிக்கு அருகே கல்யாண் நகர் மற்றும் கல்யாண்நகர் விரிவாக்க குடியிருப்பு பகுதியில் கட்டிட வேலைசெய்பவர்கள் தங்களது கட்டிட இடிபாடு வேலையின்போது அகற்றப்படும் மண் மற்றும் சிமெண்டு கழிவுகளை பெரிய ஏரியில் கொட்டிவிடுகின்றனர்.

எனவே கட்டிட கழிவுகளை கொட்டும் கட்டிட உரிமையாளர்கள் மீது அபராதம் விதிக்கவும், இனி தொடர்ந்து கொட்டப்பட்டால் உரிய நடவடிக்கை எடுத்திடவும், பொதுப்பணித்துறையினர் எச்சரிக்கை செய்திடவும் வேண்டும் என்றும் பெரிய ஏரி ஆயக்கப்பட்டு பகுதி விவசாயிகள் தெரிவித்தனர்.

மேலும் ஏரியில் இருந்து உபரி நீர் வெளியேறும் பகுதியில் உள்ள மதகுப்பகுதியும் முட்புதர்கள் படர்ந்து காடு, மேடாக கிடக்கிறது. இதனை உடனே சீரமைத்தால் மழைநீர் தேங்குவதற்கும், அதனால் நிலத்தடி நீர்மட்டம் உயருவதற்கும் அடிப்படையாக அமையும்.

இந்த ஆண்டு பருவமழைக்கு முன்பாக இவற்றை அகற்றி, தூர்வாரி சீரமைக்கவேண்டும் என்றும், மழைக்காலத்தில் நீர் தேங்கி நின்று நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்திடவும், பாசனத்திற்கும் வசதி செய்துதரவேண்டும் என்று விவசாயிகள் மாவட்ட கலெக்டருக்கும், பொதுப்பணித்துறையினருக்கும் விவசாயிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்