கொரோனாவுக்கு காட்டும் முயற்சியை விட விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்குவதற்கு அக்கறை காட்ட வேண்டும்

கொரோனாவுக்கு காட்டும் முயற்சியை விட கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்குவதற்கு முதல்-அமைச்சர் அக்கறை காட்ட வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-15 22:56 GMT
அரியலூர்,

பெருந்தலைவர் காமராஜரின் 118-வது பிறந்தநாளை முன்னிட்டு, அரியலூர் பஸ் நிலையம் எதிரேயுள்ள காமராஜர் சிலைக்கு தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில், அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். அப்போது தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கூட்டுறவு வங்கிகளை ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கொண்டு செல்லும்போதே தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தடுத்திருக்க வேண்டும். தற்போது கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன், நகைக்கடன் இல்லை என்பது விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் செயல். எனவே விவசாய பணிகள் தொடங்கியுள்ள தற்போதைய சூழலில் எடப்பாடி பழனிசாமி கொரோனா தொற்று தடுப்பு முயற்சிக்கு காட்டும் அக்கறையை விட, விவசாயிகளுக்கு நகைக்கடன் வழங்குவதற்கும் அக்கறை காட்டி உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

கொள்கை முடிவு

காங்கிரஸ் ஆளும் மாநில அரசுகளை கலைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளுவதன் மூலம் ஜனநாயகத்திற்கு புறம்பான வேலைகளையும், மாண்புகளையும் பா.ஜ.க. மேற்கொண்டு வருகிறது. அரசியல் சட்டத்தை மாற்றவும், திருத்தவும் முயற்சிக்கும் பா.ஜ.க.வின் செயல் நாட்டிற்கு பேராபத்து. ‘நீட்‘ தேர்வை பொறுத்தவரை தமிழக அரசு நாடகம் நடத்தி குழப்பமான முடிவுகளை, தகவல்களை அளிக்கிறது. நீட் தேர்வில் தமிழக அரசு ஒரு தெளிவான கொள்கை முடிவு எடுக்க வேண்டும். சிறு, குறு நிறுவனங்களை காப்பாற்ற அவர்களது வங்கி கடனுக்கு ஓராண்டு வட்டி தள்ளுபடி செய்ய மத்திய, மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின் போது அரியலூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராஜேந்திரன், இந்திய தேசிய காங்கிரசின் துணைத் தலைவரும், சக்தி திட்டத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளரும், ரோவர் கல்வி குழுமத்தை சேர்ந்தவருமான ஜான் அஷோக் வரதராஜன் மற்றும் கட்சியினர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்