இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் சாலையில் நாற்று நடும் போராட்டம்

வீரபாண்டி பகுதியில் குண்டும்-குழியுமான சாலையில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் நாற்று நட்டு போராட்டம் நடத்தினார்கள். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

Update: 2020-07-15 23:31 GMT
வீரபாண்டி,

திருப்பூர் வீரபாண்டி பகுதியில் 1 லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் ஏராளமான பனியன் நிறுவனங்கள், பள்ளிக்கூடங்கள் உள்ளன. வீரபாண்டி பகுதியில் பல இடங்களில் சாலை குண்டும்-குழியுமாக காணப்படுகிறது. இந்த சாலையை சீரமைக்க கோரி மாநகராட்சி நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. பல இடங்களில் குண்டும்-குழியுமான சாலையால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள்.

இந்த நிலையில் வீரபாண்டி பகுதியில் சாலையை சீரமைக்க கோரி இந்திய கம்யூனிஸ்டு சார்பில் கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது. ஆனால் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்காததால் நூதன முறையில் போராட்டம் நடத்த அவர்கள் முடிவு செய்தனர். அதன்படி சாலையில் நாற்று நடும் போராட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

நாற்று நடும் போராட்டம்

வீரபாண்டியில் நேற்று காலை குண்டும்-குழி சாலையில் நாற்றுகளை நடவு செய்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷங்கள் எழுப்பி போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்துக்கு இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவர் அருணாச்சலம் தலைமை தாங்கினார். ஊர் பொதுமக்கள் பலரும், கட்சியினரும் இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

இது குறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வீரபாண்டி போலீசார் விரைந்து வந்தனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார்கள். இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்து சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனால் போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

மேலும் செய்திகள்