பெங்களூருவில் வசிக்கும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு செல்ல ரெயில், விமான நிலையங்களுக்கு படையெடுப்பு

பெங்களூருவில் வசிக்கும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல நேற்று ரெயில் மற்றும் விமான நிலையங்களுக்கு படையெடுத்து வந்தனர்.

Update: 2020-07-15 22:30 GMT
பெங்களூரு, 

பெங்களூருவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் விதமாக ஒரு வாரம் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. பெங்களூருவில் வசித்து வந்த கர்நாடகத்தின் பிற மாவட்டங்களை சேர்ந்தவர்கள் கடந்த 13-ந் தேதியும், நேற்று முன்தினமும் அரசு பஸ்கள், வாடகை கார்களில் தங்களது சொந்த ஊர்களுக்கு புறப்பட்டு சென்றனர். சுமார் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பெங்களூருவை விட்டு வெளியேறி உள்ளனர்.

இந்த நிலையில், வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் போல, பெங்களூருவில் வசிக்கும் வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களும் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் உள்ளனர். நேற்று பெங்களூரு சிட்டி ரெயில் நிலையம் மற்றும் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் படையெடுத்திருந்தனர்.

பெங்களூரு சங்கொள்ளி ராயண்ணா ரெயில் நிலையத்திற்கு வடமாநிலங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கானோர் தங்களது குடும்பத்தினருடன் வந்திருந்தனர். இன்னும் ஏராளமான வடமாநில தொழிலாளர்கள் நேற்று முன்தினம் இரவே ரெயில் நிலையத்திற்கு வந்திருந்தனர். பின்னர் அந்த தொழிலாளர்கள், வடமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு உடல் வெப்ப நிலை பரிசோதனை நடத்தி, அவர்கள் ரெயில்களில் செல்வதற்கு அதிகாரிகள் ஏற்பாடு செய்து கொடுத்திருந்தனர்.

இதுபோன்று, கெம்பேகவுடா விமான நிலையத்திலும் நேற்று வழக்கத்தை விட அதிகமான பயணிகள் தங்களது சொந்த ஊருக்கு செல்ல வந்திருந்தனர். அதுவும் கடந்த 2 நாட்களாக பெங்களூருவில் இருந்து வெளிமாநிலங்களுக்கு விமானங்களில் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பெங்களூருவில் ஊரடங்கு மற்றும் கொரோனா பாதிப்பு காரணமாக வெளிமாநிலங்களை சேர்ந்தவர்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டு சென்ற வண்ணம் இருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்