பல்லடம் அருகே ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியர் உள்பட 3 பேருக்கு கொரோனா

பல்லடம் அருகே ஆரம்ப சுகாதார நிலைய பெண் ஊழியர் உள்பட 3 பேருக்கு கொரோனா.

Update: 2020-07-16 22:43 GMT
பல்லடம்,

பல்லடத்தில் கோவை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் போலீஸ் குடியிருப்பு உள்ளது. இந்த குடியிருப்பில் குடியிருந்து வரும் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஒருவரின் 31 வயதான மருமகன் ஆந்திராவில் இருந்து கடந்த சில நாட்களுக்கு முன் போலீஸ் குடியிருப்பிற்கு வந்து தங்கியுள்ளார். அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் கோவை இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து போலீஸ் குடியிருப்பு தடுப்புகளால் அடைத்து கிருமிநாசினி தெளித்து கண்காணிப்பு மேற்கொண்டு வருகின்றனர்.

இதே போல பல்லடம் கல்லம்பாளையம் பகுதியை சேர்ந்த 30 வயது ஆண் ஒருவர் சமீபத்தில் விருதுநகருக்கு சென்றுவந்தார். அவருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்குக்கொண்டு சென்றனர். இதை தொடர்ந்து கல்லம்பாளையம் பகுதியில் தடுப்புகள் அமைத்து கிருமி நாசினி தெளித்தனர். அந்த பகுதி சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்த போலீஸ் குடியிருப்பு, கல்லம்பாளையம் பகுதிகளில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்

கரைப்புதூர் ஊராட்சி அருள்புரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வகத்தில் 35 வயது உடைய பெண் ஊழியராக பணியாற்றி வருகிறார். அவருக்கும் கொரோனா நோய் தொற்று நேற்று கண்டறியப்பட்டது. இதை தொடர்ந்து அவரை திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்குக்கொண்டு சென்றனர். இதைத்தொடர்ந்து ஆரம்ப சுகாதார நிலையம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு, தடுப்புகள் அமைத்து அடைக்கப்பட்டது.

மேலும் செய்திகள்