ஆசிரியர்களின் ஊதியத்தில் ரூ.15 லட்சம் கையாடல்: கல்வி அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை தண்டனை

ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்கியதில் ரூ.15 லட்சத்தை கையாடல் செய்த கல்வி அதிகாரி உள்ளிட்ட 3 பேருக்கு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.

Update: 2020-07-17 06:05 GMT
விழுப்புரம்,

உளுந்தூர்பேட்டை உதவி தொடக்க கல்வி அலுவலகத்தில் ஆசிரியர்களுக்கு ஊதியம் வழங்குவதில் முறைகேடு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. இதுகுறித்து கல்வித்துறை உயர் அதிகாரிகள் தணிக்கை செய்தனர்.

இதில் விடுமுறை எடுக்கும் ஆசிரியர்களுக்கு அந்நாட்களில் ஊதியம் பிடித்தம் செய்யாமலேயே பொய் கணக்கு எழுதி அரசு நிதியில் பணம் பெற்று பின்னர் அந்த பணத்தில் விடுமுறை எடுத்த ஆசிரியர்களுக்கு அவர்கள் பணி செய்த நாட்களுக்குரிய ஊதியத்தை மட்டும் வழங்கி விட்டு மீதியுள்ள பணத்தை கையாடல் செய்ததும், இவ்வாறாக கடந்த 1993 முதல் 1997-ம் ஆண்டு வரை ரூ.15 லட்சத்து 2 ஆயிரத்து 571 அளவிற்கு கையாடல் நடந்திருந்ததும், இந்த தொகையை அப்போதைய உதவி தொடக்க கல்வி அலுவலராக பணியாற்றி வந்த ரகுபதி, இளநிலை உதவியாளர் அமானுல்லா, உளுந்தூர்பேட்டை பாலியில் உள்ள அரசு பள்ளி தலைமை ஆசிரியர் பொன்கண்ணன் ஆகியோர் கையாடல் செய்திருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.

3 பேருக்கு சிறை

இது குறித்து அப்போதைய சென்னை தொடக்க கல்வி இயக்குனராக இருந்த நாராயணசாமி கொடுத்த புகாரின்பேரில் கடலூர் சி.பி.சி.ஐ.டி. போலீசார், கடந்த 9.12.1997 அன்று வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். பின்னர் ரகுபதி உள்ளிட்ட 3 பேரையும் போலீசார் கைது செய்து விழுப்புரம் மாவட்ட தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

பின்னர் இவ்வழக்கு விழுப்புரம் ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்தது. வழக்கு விசாரணை நடந்து கொண்டிருக்கும்போதே 3 பேரும் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர்.

இந்நிலையில் இவ்வழக்கில் சாட்சிகள் விசாரணை முடிவடைந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது. குற்றம் சாட்டப்பட்ட ரகுபதிக்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.3 லட்சத்து 79 ஆயிரம் அபராதமும், அமானுல்லாவிற்கு 7 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.1 லட்சத்து 82 ஆயிரம் அபராதமும், பொன்கண்ணனுக்கு 4 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.2 லட்சத்து 70 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி மோகன் தீர்ப்பு கூறினார். இதையடுத்து தண்டனை விதிக்கப்பட்ட ரகுபதி உள்ளிட்ட 3 பேரும் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இவ்வழக்கில் அரசு தரப்பில் வக்கீல் வைத்தியநாதன் ஆஜரானார்.

மேலும் செய்திகள்