கும்பகோணத்தில் எண்ணெய் வியாபாரி கொலை-கொள்ளை வழக்கில் 5 பேர் கைது

கும்பகோணத்தில் எண்ணெய் வியாபாரியை கொலை செய்து, பணம்-நகை கொள்ளையடிக்கப்பட்ட வழக்கில் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-07-18 01:46 GMT
கும்பகோணம்,

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவிரி காவிரிக்கரை தெருவை சேர்ந்தவர் ராமநாதன்(வயது 65). எண்ணெய் வியாபாரியான இவருடைய மனைவி விஜயா(58). இவர்கள் தங்களது மகள் மற்றும் மருமகன் ஆகியோருடன் ஒரே வீட்டில் வசித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 15-ந் தேதி மகளும், மருமகனும் ஒரு திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வெளியூர் சென்றிருந்தனர்.

இதனால் வீட்டில் ராமநாதன், விஜயா ஆகியோர் மட்டுமே இருந்தனர். இரவு 7 மணி அளவில் திருமண அழைப்பிதழ் கொடுப்பதாக கூறி வீட்டுக்கு 2 பேர் வெற்றிலை, பாக்கு, பழம், தாம்பூல தட்டுடன் வந்தனர். அப்போது ராமநாதன், அந்த 2 பேருக்கும் குடிக்க தண்ணீர் கொண்டு வரும்படி விஜயாவிடம் கூறினார். இதையடுத்து தண்ணீர் எடுப்பதற்காக விஜயா, சமையலறைக்கு சென்றார்.

நகை-பணம் கொள்ளை

அந்த நேரத்தில் வீட்டுக்குள் மேலும் 3 பேரும் உள்ளே நுழைந்து, விஜயாவை சமையலறைக்குள் வைத்து பூட்டினர். பின்னர் வீட்டில் இருந்த நகை-பணத்தை கொள்ளையடித்து விட்டு ராமநாதனை கழுத்தை அறுத்து கொலை செய்து விட்டு தப்பிச்சென்றனர். இதுகுறித்து கும்பகோணம் கிழக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த சில மாதங்களாக விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கும்பகோணம் பழைய பாலக்கரையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் நின்று கொண்டிருந்த 5 பேரை பிடித்து விசாரித்தனர்.

5 பேர் கைது

விசாரணையில் அவர்கள், கும்பகோணம் ஆழ்வான்கோவில் தெருவை சேர்ந்த தங்கபாண்டியன்(41), அசூர்ரோடு சித்தி விநாயகர் நகரை சேர்ந்த வினோத்(30), மேட்டுத்தெருவை சேர்ந்த ஹரிஹரன்(22), தஞ்சை மாதாக்கோட்டை பகுதியை சேர்ந்த ரஞ்சன்(29), பாலாஜி(25) ஆகியோர் என்பதும், ராமநாதனை கடந்த மார்ச் மாதம் கொலை செய்து, நகை மற்றும் பணத்தை கொள்ளையடித்துவிட்டு தலைமறைவானவர்கள் என்பதும் தெரிய வந்தது.

இதையடுத்து 5 பேரையும் போலீசார் கைது செய்து அவர்களிடம் இருந்த 5 கத்திகள், 3 செல்போன்கள், 4½ பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். 

மேலும் செய்திகள்