திருக்கோவிலூரில் பெரியார் சிலை அவமதிப்பு தி.மு.க.-வி.சி.க.வினர் சாலை மறியல்

திருக்கோவிலூரில் பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்து தி.மு.க.-வி.சி.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

Update: 2020-07-18 04:40 GMT
திருக்கோவிலூர்,

திருக்கோவிலூர் கீழையூரில் பெரியார் சிலை உள்ளது. இந்த நிலையில் நேற்று யாரோ மர்ம நபர்கள் சிலர் பெரியார் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்து அவமதிப்பு செய்தனர். இதை அறிந்த தி.மு.க. ஒன்றிய செயலாளர் வக்கீல் எம்.தங்கம், நகர செயலாளர் ஆர்.கோபி என்கிற கோபிகிருஷ்ணன், திருக்கோவிலூர் முன்னாள் பேருராட்சி மன்ற துணைத்தலைவர் டி.குணா என்கிற குணசேகரன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் வக்கீல் ராயல் எஸ்.அன்பு, முன்னாள் கவுன்சிலர் லதாசரவணன், இளைஞரணி நிர்வாகி தானிவேல், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் நகர செயலாளர் தயா என்கிற செந்தில், மாநில கொள்கை விளக்க அணி செயலாளர் கோட்டமருதூர் சுப்பிரமணியன் என்கிற தமிழ்நிலவன், மாவட்ட துணை செயலாளர் வெற்றிவேல், நகர பொருளாளர் ஆர்.சரவணன், நகர செயலாளர் சத்தியதாஸ், நிர்வாகிகள் மைக்கேல், கார்த்தி உள்பட பலர் அங்கு திரண்டனர்.

சாலை மறியல்

தொடர்ந்து பெரியார் சிலை அவமதிப்பு செய்யப்பட்டதை கண்டித்தும், இந்த சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்ய வலியுறுத்தியும் திடீரென அவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த திருக்கோவிலூர் சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்திரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பெரியார் சிலையை அவமதிப்பு செய்தவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் கூறினர். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். பின்னர் பெரியார் சிலை மீது போடப்பட்ட செருப்பு மாலையை அகற்றிய தி.மு.க. மற்றும் வி.சி.க.வினர், சிலையை கழுவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

மேலும் செய்திகள்