மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்

மயிலாடுதுறையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் சாலை மறியல்.

Update: 2020-07-19 03:43 GMT
குத்தாலம்,

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் தனியார் ஒப்பந்த நிறுவனம் மூலம் 150-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தூய்மைப்பணி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் வேலை செய்து வருகின்றனர். அவர்களில் 5 பேரை எந்தவித காரணமுமின்றி, அந்த தனியார் ஒப்பந்த நிறுவனம் பணி நீக்கம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் நிர்ணயித்துள்ள தினக்கூலி ரூ.310-க்கு பதிலாக ரூ.250 மட்டுமே வழங்குவதாகவும், அவர்களுக்கு சம்பள பில் கூட வழங்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் அரசு மருத்துவமனையில் உள்ள தனியார் ஒப்பந்த தொழிலாளர்களின் குறைகளை தீர்க்கக்கோரி மனு கொடுத்தனர். இதுகுறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனை கண்டித்து நேற்று அரசு மருத்துவமனை முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிர்வாகிகள் ரவீந்திரன், துரைக்கண்ணு, சீனிவாசன், ஸ்டாலின், மேகநாதன் உள்ளிட்டோர் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாசில்தார் முருகானந்தம், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிங்காரவேலு ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அவர்கள் கலைந்து சென்றனர்.


மேலும் செய்திகள்