புதிதாக 96 பேருக்கு தொற்று: கொரோனாவுக்கு தொழிலாளி சாவு பலி எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனாவுக்குதொழிலாளி பலியானார். இதனால் சாவு எண்ணிக்கை 27 ஆக உயர்ந்தது.

Update: 2020-07-19 05:34 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டத்தில்கொரோனா நோய் தொற்று மின்னல் வேகத்தில் பரவி வருகிறது. அதுபோல் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உயிரிழக்கும் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 2,040 பேர் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டனர். இவர்களில் 26 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். முண்டியம்பாக்கத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனா வார்டில் பலர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதில் விக்கிரவாண்டி அருகே உள்ள வி.சாலை பகுதியை சேர்ந்த 47 வயதுடைய தொழிலாளி, நேற்று அதிகாலை சிகிச்சை பலனின்றி இறந்தார். இதையடுத்து சுகாதாரத்துறை விதிமுறைப்படி அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது.

96 பேருக்கு கொரோனா

விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டவர்களில் நேற்று 300-க்கும் மேற்பட்டோரின் மருத்துவ பரிசோதனை முடிவுகள் வந்தது. இதில் மேலும் 96 பேருக்கு புதிதாக கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர்களில் வல்லம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணியாற்றி வரும் உதவியாளர், செஞ்சி போலீஸ் நிலையத்தில் பணியாற்றி வரும் போலீஸ்காரர், விழுப்புரம் ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் பணியாற்றி வரும் ஊழியர் ஆகியோரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரும் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். இதன் மூலம் விழுப்புரம் மாவட்டத்தில் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,136 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில் நேற்று 31 பேர் பூரண குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மேலும் செய்திகள்