கந்தசஷ்டி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டவர்களுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? அமைச்சர் கேள்வி

கந்தசஷ்டி குறித்து அவதூறு வீடியோ வெளியிட்டவர்களுக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவிக்காதது ஏன்? என்று அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.

Update: 2020-07-20 05:35 GMT
விழுப்புரம்,

விழுப்புரம் நகரில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து நேற்று மாலை ஆய்வு மேற்கொண்ட சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மின் கட்டணம் தொடர்பாக ஏற்கனவே தமிழக அரசு பல்வேறு விளக்கங்களை கொடுத்துள்ளது. மின்கட்டண விவகாரம் தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றமே தமிழக அரசின் செயல்பாடுகள் சரி என்று கூறியுள்ளது. இருப்பினும் தி.மு.க. உள்நோக்கத்தோடு ஆர்ப்பாட்டம் அறிவித்துள்ளது. இதற்கெல்லாம் அறிக்கை மற்றும் போராட்டங்களை அறிவிக்கின்ற அக்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின், கந்தசஷ்டி கவச பாடல் குறித்து, கருப்பர் கூட்டம் என்ற ‘யூ டியூப்’ சேனலில் அவதூறாக வீடியோ வெளியிட்டவர்களுக்கு இதுவரை கண்டனம் தெரிவிக்காதது ஏன்?, கண்டன அறிக்கையும் வெளியிடவில்லை. அவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால் அவர், அனைத்து மதத்தினரையும் சமமாக பார்க்க வேண்டும்.

தி.மு.க. மீது சந்தேகம்

இது திடீரென்று பரப்பப்பட்ட செய்தி அல்ல. கடவுளையும் மதத்தையும் இழிவுபடுத்துவது சமீபகாலமாக நடந்து வருகிறது. இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களை மட்டும் விசாரித்தால் அர்த்தம் இல்லாமல் போகும். இதற்கு யார் காரணம்? என்பது குறித்து ஆராய்ந்து பின்னணியில் யார் இருக்கிறார்கள் என்பதை கண்டறிந்து விசாரிக்கப்பட வேண்டும். மேலும் இந்த விவகாரத்தில் இதுவரை மு.க.ஸ்டாலின் மவுனமாக இருப்பதை பார்த்தால் தி.மு.க.வின் மீது சந்தேகமாக உள்ளது. எனவே இந்த விவகாரத்தில் தி.மு.க.வையும் விசாரிக்க வேண்டும். திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்தவர்களை போலீசார் உடனடியாக கைது செய்துள்ளனர்.

இவ்வாறு அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.

மேலும் செய்திகள்