ஆடி அமாவாசை தர்ப்பணம் செய்ய தடை: திருச்செந்தூர்-தூத்துக்குடி கடற்கரை வெறிச்சோடியது

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதை தொடர்ந்து ஆடிஅமாவாசை தினமான நேற்று திருச்செந்தூர் கோவில் கடற்கரை மற்றும் தூத்துக்குடி துறைமுக கடற்கரை பகுதிகள் ஆட்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி கிடந்தன.

Update: 2020-07-20 22:30 GMT
தூத்துக்குடி,

தமிழ் மாதம் ஆடி, தை அமாவாசை தினத்தில் கடற்கரை, ஆற்றாங்கரை போன்ற நீர்நிலைப் பகுதிகளில் இந்துக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபடுவது வழக்கமாக இருந்து வருகிறது. இதில் தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை திருச்செந்தூர் கடற்கரையில் பல ஆயிரம் பேர் கூடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பர்.

இந்நிலையில் கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதால் நேற்று திருச்செந்தூர் கோவில் கடற்கரையில் பக்தர்கள் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, கோவில் பகுதியில் கடற்கரைக்கு செல்லும் பாதைகளில் ஆங்காங்கே தடுப்பு வேலிகள் அமைத்து போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் கோவில் கடற்கரை ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.

அதேசமயம் திருச்செந்தூர் கோவிலில் வழக்கமாக நடைபெறும் பூஜைகள் நடைபெற்றன. ஆடி அமாவாசை தினமான நேற்று சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியிலும் பக்தர்கள் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டு இருந்ததால், கோவில் பட்டர்கள் மட்டுமே நிகழ்ச்சியை நடத்தினர்.

சில பக்தர்கள் தங்கள் வீடுகளிலேயே தர்ப்பணம் செய்து, திருச்செந்தூர் பைரவர் கோவில் கடற்கரைக்கு சென்று கடலில் புனித நீராடி தங்கள் மூதாதையர்களை வழிபட்டனர்.

இதேபோன்று தூத்துக்குடி துறைமுக கடற்கரை, திரேஸ்புரம் உள்ளிட்ட வழக்கமாக தர்ப்பணம் கொடுக்கும் பகுதிகளில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது. கடற்கரைக்கு மக்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் பலர் கடற்கரைக்கு சென்று விட்டு திரும்பினர். சிலர் ஆங்காங்கே உள்ள நீர்நிலை பகுதிகளில் தர்ப்பணம் செய்து முன்னோரை வழிபட்டனர்.

இந்த நிலையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் துறைமுகம் கடற்கரை பகுதிக்கு வந்தார். அங்கு பொதுமக்கள் கூடாமல் பாதுகாப்பாக உள்ளதா என்று ஆய்வு செய்தார். அதன்பிறகு, தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரைகளில் மக்கள் கூட்டம் ஏதேனும் உள்ளதா என்றும் நேரில் சென்று பார்வையிட்டார். ஆய்வின் போது, தூத்துக்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு கணேஷ், தெர்மல்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகிலா மற்றும் போலீசார் உடன் இருந்தனர்.

கயத்தாறில் கோதண்டராம ஈஸ்வர் கோவில் வரலாற்று சிறப்பு மிக்க ஆலயங்களில் ஒன்றாகும். இந்த கோவிலில் ராமபிரான் தங்கி சிவனை வணங்கிய திருத்தலங்களில் ஒன்றாகும். ராமேஸ்வரத்திற்கு 41 நாட்களுக்கு முந்தைய சிறப்புடைய புனித தலமாகும். இங்கு இருந்து தான் சீதாதேவியை மீட்டு வர அனுமனுக்கு கோதண்டம் வழங்கிய இடமாகும். ஆகவே இங்கு வீற்றிருக்கும் சிவனுக்கு கோதண்டராமேஸ்வர் என பெயர் வழங்கியது. இத்திருதலம் காசி, ராமேஸ்வரம், பாபநாசம் உள்ளிட்ட தலங்களுக்கு, முந்தையது என்பதால் இங்கு வந்து இறந்தவர்களின் அஸ்தியை கரைத்தால் மோட்சம் கிடைக்கும் என்பது ஐதீகம்.

இத்திருத்தலத்திற்கு மதுரை திருச்சி தஞ்சாவூர் கோவை கும்பகோணம் மற்றும் சுற்றுப்புறத்திலுள்ள மாவட்டங்களை ஏராளமான பக்தர்கள் வந்து வழிபட்டு செல்வது வழக்கம். மேலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை ஆகிய நாட்களில் கயத்தாறு மற்றும் 45 கிராம பஞ்சாயத்தை சேர்ந்த 162 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் இங்கு வந்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து தெப்பக்குளத்தில் நீராடி செல்வர். ஆனால் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக நேற்று கோவில் நடை சாத்தப்பட்டு, முன்புறம் வாசலில் பக்தர்கள் நுழையாதவாறு அடைக்கப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். இதனால் பக்தர்கள் யாரும் தர்ப்பணம் கொடுக்க வரவில்லை.

மேலும் செய்திகள்