அடுத்த மாதம் அரசு ஊழியர்களின் சம்பளம், ஓய்வூதியம் பாதிக்கப்படும் கவர்னர் கிரண்பெடி சொல்கிறார்

அரசு ஊழியர்கள் சம்பளம், செலவு, ஓய்வூதியம் போன்றவை அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் பாதிக்கப்படும் என கவர்னர் கிரண்பெடி தெரிவித்துள்ளார்.

Update: 2020-07-20 22:55 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. காலை 9.30 மணிக்கு கவர்னர் உரையும், மதியம் 12.05 மணிக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கிடையே கடந்த 18-ந் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் கவர்னர் உரைக்கு இறுதி வடிவம் கொடுக்கப்பட்டு கவர்னர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

ஆனால் கவர்னர் கிரண்பெடி உரையை படிக்க கூடுதல் அவகாசம் கேட்டு தலைமை செயலாளர் மூலமாக அரசுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து காங்கிரஸ், தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் ஆலோசித்து திட்டமிட்டபடி பட்ஜெட்டை நடத்துவது என்று முடிவு செய்தனர்.

இதற்கிடையே கவர்னர் கிரண்பெடி சட்டசபை கூட்டத்தை மற்றொரு நாளுக்கு தள்ளி வைக்கும்படி கேட்டுக்கொண்டார். அதாவது, முதல்-அமைச்சருக்கு அனுப்பிய கடிதத்தில் பட்ஜெட் தொடர்பான கோப்பு தனக்கு வரவில்லை. எனவே கவர்னர் உரை, பட்ஜெட் தாக்கல் மற்றொரு நாளில் வைக்கும்படி குறிப்பிட்டிருந்ததாகவும் அந்த கடிதத்தை முதல்-அமைச்சர் அலுவலக ஊழியர்கள் பெற மறுத்து விட்டதாகவும் இதுதொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு புகார் தெரிவித்து இருப்பதாகவும் சமூக வலைதளத்தில் கவர்னர் கிரண்பெடி ஒரு பதிவை வெளியிட்டார்.

இதன் எதிரொலியாக நேற்று காலை சட்டசபைக்கு வராமல் பட்ஜெட் உரையாற்றுவதை கவர்னர் கிரண்பெடி புறக்கணித்தார். இந்த நிலையில் சமூக வலைத்தளத்தில் நேற்று புதிதாக ஒரு கருத்து தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

சட்ட விதிகளின் படி பட்ஜெட் கோப்புகள் என்னிடம் அனுப்பப்படவில்லை. புதுவை மாநிலத்தில் உள்ள அரசு ஊழியர்கள் சம்பளம், செலவு, ஓய்வூதியம் போன்றவை அடுத்த மாதம் (ஆகஸ்டு) முதல் பாதிக்கப்படும். இந்த குற்றம் கவர்னர் மீதோ, இந்திய அரசு மீதோ சுமத்தப்படக் கூடாது. கவர்னர் தாமதப்படுத்தியதாக முதல்-அமைச்சரோ, அமைச்சர்களோ குற்றம் சாட்டினால் அது தவறானது. சட்ட விதிகளின் கீழ் ஜனாதிபதியிடம் ஒப்புதல் பெறப்பட்ட பட்ஜெட் கோப்பை எனக்கு அனுப்பவில்லை. விதிகள், சட்டத்தை நான் எழுதவில்லை. அதே நேரத்தில் யூனியன் பிரதேச சட்ட விதிகளை நாங்கள் அறிந்துள்ளோம். தாமதம் கவர்னரிடம் இல்லை. உண்மையற்ற குற்றச்சாட்டுகளை மக்களிடம் யாரும் பரப்பக் கூடாது. இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்