ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாமல் பொதுமக்கள் அவதி

ஊரடங்கு உத்தரவு காரணமாக ஆடி அமாவாசையையொட்டி முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாமல் மக்கள் அவதிப்பட்டனர். இதனால் கோடியக்கரை கடற்கரையில் மக்கள் கூட்டம் இன்றி வெறிச்சோடி கிடந்தது.

Update: 2020-07-21 01:04 GMT
வேதாரண்யம்,

நாகை மாவட்டம் வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை ஆகிய கடற்கரை பகுதியில் ஆண்டு தோறும் ஆடி அமாவாசை, தை அமாவாசை நாட்களில் திரளானோர் திரண்டு வந்து புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுத்து வேதாரண்யேஸ்வரர் கோவிலில் திருமண கோலத்தில் உள்ள சிவபெருமானை வழிபட்டு செல்வது வழக்கம்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறக்கப்பட்டுள்ளதால் கடற்கரை பகுதியில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. நேற்று ஆடி அமாவாசையையொட்டி மக்கள் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்க கடற்கரை பகுதிகளுக்கு திரண்டு வருவார்கள் என்பதால் கோடியக்கரை தீர்த்தகட்டத்திற்கு செல்லும் முக்கிய வழித்தடத்தில் போலீசார் நிறுத்தப்பட்டு இருந்தனர். அப்போது கடற்கரை பகுதியில் திதி கொடுக்க வந்த மக்களை போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் தங்களது முன்னோர்களுக்கு திதி கொடுக்க முடியாமல் அவதிப்பட்டனர். ஒருசிலர் வேறு வழியில் சென்று முழுக்குதுறையை விட்டு வேறு இடங்களில் கடலில் நீராடி சென்றனர்.

கடற்கரை வெறிச்சோடியது

இதேபோல வேதாரண்யம் சன்னதி கடலுக்கு செல்லும் சாலையில் போலீசார் நிறுத்தப்பட்டு திதி கொடுக்க சென்றவர்களை தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். மேலும் கடலோர காவல் படையில் கடற்கரை பகுதியில் ஜீப்பில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

வேதாரண்யம் மற்றும் கோடியக்கரை கடற்கரை பகுதிகளில் திதி கொடுக்க தடை விதிக்கப்பட்டதால் மக்கள் கூட்டம் இன்றி கடற்கரை பகுதி வெறிச்சோடி கிடந்தது.

நாகப்பட்டினம்

ஆடி அமாவாசையையொட்டி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக நாகை புதிய கடற்கரைக்கு வந்த பொதுமக்களை போலீசார் தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். முன்னதாக புதிய கடற்கரையில் கடலோர பாதுகாப்பு குழும போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் கடற்கரைக்கு வந்த பொதுமக்களையும் கடலில் குளிக்க அனுமதிக்கவில்லை. இதேபோல் காமேஸ்வரம், கோடியக்கரை, வேதாரண்யம், பூம்புகார் உள்ளிட்ட கடற்கரைகளிலும் போலீசார் தடுப்புகள் அமைத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்