புதுச்சேரி என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு கொரோனா: திறந்தவெளியில் நடந்த சட்டசபை விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றம்

பட்ஜெட் கூட்டத்தில் பங்கேற்ற என்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ. தொற்றால் பாதிக்கப்பட்டதையடுத்து புதுச்சேரி சட்டசபை கூட்டம் திறந்தவெளியில் நடந்தது. விவாதமின்றி மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன.

Update: 2020-07-26 00:56 GMT
புதுச்சேரி,

புதுச்சேரி அரசியலில் எப்போதும் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது.
பட்ஜெட் கூட்டத்தொடரில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ. ஒருவருக்கு கொரோனா கண்டறியப்பட்டதையடுத்து மரத்தின் அடியில் திறந்தவெளியில் நேற்று சட்டசபை கூட்டம் நடந்த வினோதம் புதுச்சேரியில் அரங்கேறி மீண்டும் பரபரப்புக்குள்ளாகி உள்ளது.

இதுபோல் திறந்தவெளியில் போட்டி சட்டசபை கூட்டங்களை எதிர்க்கட்சிகளும், சில சமூக அமைப்புகளும் போராட்ட வடிவில் நடத்தி உள்ளன. ஆனால் உண்மையான சட்டசபை கூட்டம் இந்தியாவிலேயே வேறு எங்கும் இதுபோல் மரத்தின் அடியில் நடந்தது இல்லை.

சுதந்திர தினம், குடியரசு தின கொண்டாட்டத்தின் போது கிராமசபை கூட்டங்கள் திறந்த வெளிகளில் நடத்தப்படுவது வழக்கம். புதுவை சட்டசபை வளாகத்தில் நேற்று நடந்த சட்டசபை கூட்டம் அத்தகைய கிராமசபை கூட்டங்களை நினைவுபடுத்தியது.

அதாவது, புதுவை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 20-ந் தேதி தொடங்கியது. அன்றைய தினம் கவர்னர் உரையை தொடர்ந்து நிதிதுறை பொறுப்பு வகிக்கும் முதல்-அமைச்சர் நாராயணசாமி பட்ஜெட்டை தாக்கல் செய்வதாக இருந்தது. ஆனால் கவர்னர் புறக்கணிப்பை தொடர்ந்து பட்ஜெட்டை நாராயணசாமி தாக்கல் செய்தார். இதில் எதிர்க்கட்சி தலைவர் ரங்கசாமி தலைமையில் என்.ஆர்.காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டு புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.

இதன்பின் நேற்று முன்தினம் சட்டசபையில் கலந்து கொண்டு கவர்னர் கிரண்பெடி உரையாற்றினார். இதில் என்.ஆர். காங்கிரஸ் கட்சி கலந்து கொண்டது. ஆனால் அந்த கட்சியை சேர்ந்த என்.எஸ்.ஜே. ஜெயபால் எம்.எல்.ஏ. கலந்து கொள்ளவில்லை. இந்தநிலையில் சளி, காய்ச்சல் தொல்லையால் அவதிப்பட்டு உடல்நிலை பாதிக்கப்பட்ட அவருக்கு கதிர்காமம் கொரோனா மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் என்.எஸ்.ஜே. ஜெயபால் எம்.எல்.ஏ.வுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து கலிதீர்த்தாள்குப்பத்தில் உள்ள மணக்குள விநாயகர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தட்டாஞ்சாவடி வி.வி.பி. நகரில் உள்ள அவரது வீடு மற்றும் குடும்பத்தினர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். புதுச்சேரி மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிக்கப்பட்ட முதல் எம்.எல்.ஏ. ஜெயபால் ஆவார்.

ஏற்கனவே என்.ஆர்.காங்கிரஸ் பொதுச்செயலாளரான பாலன் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மணக்குள விநாயகர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவரது கட்சி எம்.எல்.ஏ.வுக்கும் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

என்.எஸ்.ஜே.ஜெயபால் எம்.எல்.ஏ.வுக்கு தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டு இருப்பது அவரது கட்சியினரை மட்டுமின்றி அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், தொகுதி கட்சி பிரமுகர்கள், பொதுமக்களை கலக்கமடைய வைத்துள்ளது. இந்தநிலையில் என்.ஆர்.காங்கிரஸ் கட்சி தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி தனது வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டார்.

கடந்த 2 நாட்களுக்கு முன்பு வரை சட்டசபை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட என்.எஸ்.ஜே. ஜெயபால் எம்.எல்.ஏ. மற்ற எம்.எல்.ஏ.க்களுடன் சகஜமாக பேசி வந்துள்ளார். இதையொட்டி என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.க., பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய சுகாதார துறை முடிவு செய்துள்ளது.

இந்தநிலையில் நேற்று சட்டசபை நடைபெறும் மைய மண்டபம் மூடப்பட்டு சட்டசபை முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. அரசு ஊழியர்கள் சம்பளம், ஓய்வூதியம் மற்றும் முக்கிய செலவினங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்ய சட்டசபையின் ஒப்புதல் பெற வேண்டிய அவசியம் ஏற்பட்டதால் திட்டமிட்டபடி கூட்டத்தை நடத்தி ஒப்புதல் பெறுவது குறித்து சபாநாயகர் சிவக்கொழுந்துவுடன் முதல்-அமைச்சர் நாராயணசாமி மற்றும் அமைச்சர்கள் அவசர ஆலோசனை நடத்தினர்.

அப்போது சட்டசபை கூட்டத்தை 4-வது மாடியில் உள்ள கருத்தரங்க அறையில் நடத்துவது என்று முடிவு செய்து அங்கு இருக்கைகள் போடப்பட்டு ஒலிபெருக்கி வசதியும் செய்யப்பட்டது.

ஆனால் அங்கு சட்டசபை கூட்டத்தை நடத்துவது உகந்ததாக இருக்காது என்று கருத்து தெரிவிக்கப்பட்டது. இதனால் சட்டசபை வளாகத்திலேயே வேறொரு இடத்தில் கூட்டம் நடத்துவது குறித்து ஆய்வு செய்தனர். அப்போது மைய மண்டபம் எதிரில் தேசியக்கொடி அமைக்கப்பட்டுள்ள இடத்தில் திறந்தவெளியில் கூட்டத்தை நடத்தலாமா? என்பது பற்றி யோசித்தனர். மேலும் அங்கு கார்கள் நிறுத்தப்படும் வேப்ப மரத்தடியில் திறந்தவெளியில் கூட்டம் நடத்துவது குறித்தும் யோசனை தெரிவிக்கப்பட்டது. அந்த இடம் எப்போதும் நிழலாக இருக்கும் என்பதால் வேப்பமரத்தின் அடியிலேயே சட்டசபை கூட்டத்தை நடத்துவது என்று இறுதியில் முடிவு செய்யப்பட்டது.

அதன்படி உடனடியாக அந்த இடத்தில் பந்தல் அமைத்து இருக்கைகள் போடப்பட்டு, ஒலிபெருக்கி வசதியுடன் கூட்டம் நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டன. நண்பகல் 1.30 மணிக்கு கூட்டம் தொடங்கியது. கூட்டத்தில் முதல்-அமைச்சர் மற்றும் அமைச்சர்கள் தாங்கள் வகிக்கும் துறைகளுக்கான மானிய கோரிக்கைகளை தாக்கல் செய்தனர்.

இந்த கோரிக்கைகள் மீது விவாதம் நடத்த அனுமதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தினர். ஆனால் போதுமான கால அவகாசம் இல்லை என்பதாலும் உடனடியாக கூட்டத்தை முடித்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்தாலும் அதற்கு அனுமதிக்க முடியாது என்று சபாநாயகர் சிவக்கொழுந்து அனுமதி மறுத்தார்.

இதைத்தொடர்ந்து பொது பட்ஜெட் மற்றும் மானிய கோரிக்கைகள் எந்தவித விவாதமும் இன்றி நிறைவேற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இத்துடன் புதுவை சட்டசபையை காலவரையின்றி ஒத்திவைத்து சபாநாயகர் சிவக்கொழுந்து உத்தரவிட்டார்.

மேலும் செய்திகள்