எம்.எல்.சி. பதவி வழங்கியதற்காக நன்றி கூற வந்தார் எடியூரப்பாவை சந்திக்க முடியாததால் எம்.டி.பி.நாகராஜ் ஏமாற்றம்

தனக்கு எம்.எல்.சி. பதவி வழங்கியதற்காக முதல்-மந்திரி எடியூரப்பாவை சந்தித்து நன்றி கூற எம்.டி.பி.நாகராஜ் நேற்று அவரது இல்லத்துக்கு வந்தார். ஆனால் சந்திக்க அனுமதி கிடைக்காததால் எம்.டி.பி.நாகராஜ் ஏமாற்றம் அடைந்துள்ளார்.

Update: 2020-07-26 21:16 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் காங்கிரஸ்-ஜனதா தளம்(எஸ்) கூட்டணி ஆட்சியில் குமாரசாமி முதல்-மந்திரியாக இருந்தபோது, வீட்டு வசதித்துறை மந்திரியாக பணியாற்றியவர் எம்.டி.பி.நாகராஜ். அவர் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்து பா.ஜனதாவில் சேர்ந்தார். குமாரசாமி ஆட்சி கவிழ்ந்ததை அடுத்து, எடியூரப்பா தலைமையில் பா.ஜனதா ஆட்சி அமைந்தது. அதன் பிறகு நடைபெற்ற சட்டசபை இடைத்தேர்தலில் ஒசக்கோட்டை தொகுதியில் போட்டியிட்ட எம்.டி.பி.நாகராஜ் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் அவருக்கு முதல்-மந்திரி எடியூரப்பா, எம்.எல்.சி. பதவியை வழங்கியுள்ளார்.

இந்த நிலையில் முதல்-மந்திரி எடியூரப்பாவை பெங்களூருவில் உள்ள காவேரி இல்லத்தில் சந்திக்க எம்.டி.பி.நாகராஜ் பூங்கொத்துடன் வந்தார். எடியூரப்பா வீட்டிலேயே இருந்தார். ஆனாலும் முதல்-மந்திரியை சந்திக்க அவருக்கு அனுமதி கிடைக்கவில்லை. இதனால் அவர் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றார்.

அதற்கு முன் எம்.டி.பி.நாகராஜ் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருப்தி அடைந்துள்ளேன்

முதல்-மந்திரி எடியூரப்பா எனக்கு எம்.எல்.சி. பதவி கொடுத்துள்ளார். இதற்காக அவருக்கு நன்றி கூற வந்தேன். ஆனால் அவரை சந்திக்க அனுமதி கிடைக்கவில்லை. மீண்டும் அவரை சந்திக்க முயற்சி செய்வேன். மந்திரி பதவி வழங்குவது பற்றி அவர், பா.ஜனதா மேலிடம் முடிவு செய்யும். மேலிடத்தின் முடிவுக்கு கட்டுப்படுவேன். தற்போதைக்கு எம்.எல்.சி. பதவி கிடைத்துள்ளதால் திருப்தி அடைந்துள்ளேன். மந்திரி பதவி வழங்குவது குறித்து எனக்கு எந்த உறுதிமொழியும் கட்சியிடம் இருந்து இதுவரை கிடைக்கவில்லை. எனக்கு ஏற்பட்ட அநீதியை எடியூரப்பா சரிசெய்வார் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு எம்.டி.பி.நாகராஜ் கூறினார்.

மேலும் செய்திகள்