சுற்றுலா பயணிகள் வராததால் வெறிச்சோடி கிடக்கும் நோணாங்குப்பம் படகு குழாம்

சுற்றுலா பயணிகளின் வருகை இன்றி நோணாங்குப்பம் படகு குழாம் வெறிச்சோடியது.

Update: 2020-07-26 21:44 GMT
அரியாங்குப்பம்,

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் திகழ்ந்து வருகிறது. இங்கு வரும் பயணிகள் படகில் சவாரி செய்து சுண்ணாம்பாறு கடலில் கலக்கும் முகத்துவாரத்தில் அமைந்துள்ள பாரடைஸ் பீச்சுக்கு சென்று உல்லாசமாக பொழுதை கழித்து மகிழ்வது வழக்கம். இங்கு கடலில் குளிப்பது, கடற் கரையில் வந்து மோதும் அலையில் கால்களை நனைத்து விளையாடுவது என்பது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் விருப்பமாக உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 18-ந் தேதி படகு குழாம் மூடப்பட்டது. ஆனால் அங்குள்ள ஊழியர்கள், தினமும் படகுகளை இயக்கி, பராமரித்து வந்தனர். 6-வது கட்ட ஊரடங்கு தளர்வின்போது படகு குழாமை இயக்க அரசு அனுமதித்தது.

இதையடுத்து கடந்த 2-ந் தேதி நோணாங்குப்பம் படகு குழாம் திறக்கப்பட்டது. ஆனால் மாவட்டம் விட்டு மாவட்ட செல்ல கட்டுப்பாடுகள், இ-பாஸ் பெறுவதில் சிக்கல், கொரோனா தொற்று அச்சுறுத்தல் தொடர்வதால் வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அறவே இல்லாமல் போனது. உள்ளூர்களில் இருந்து ஒரு சிலர் மட்டுமே இங்கு வந்து சென்றனர்.

வெறிச்சோடியது

ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று சுற்றுலா பயணிகள் யாரும் இங்கு வரவில்லை. இதனால் படகு குழாம் வெறிச்சோடி காணப்பட்டது. படகுகள் இயக்கப்படாததால் கரையோரங்களில் அவை பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன.

மேலும் செய்திகள்