முழு ஊரடங்கையொட்டி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைகள் அடைப்பு - மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடின

முழு ஊரடங்கையொட்டி நாகை, திருவாரூர் மாவட்டங்களில் கடைகள் அடைக்கப்பட்டதால் மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.

Update: 2020-07-26 22:45 GMT
நாகப்பட்டினம்,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் கடந்த மார்ச் மாதம் 25-ந்தேதி முதல் ஊரடங்கை அமல்படுத்தியது. ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காலங்களில் அத்தியாவசிய கடைகளான மருத்துகடைகள், மளிகை கடைகள், பால் கடைகள் மட்டுமே செயல்பட்டன. இந்த ஊரடங்கானது படிப்படியாக பல்வேறு தளர்வுகளுடன் அமலில் உள்ளது. இதையடுத்து இந்த மாதம் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்தது.

நாகை மாவட்டத்தில் 3 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. நேற்று 4-வது ஞாயிற்றுக்கிழமையான முழு ஊரடங்கையொட்டி நாகையில் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் நகரின் முக்கிய சாலைகள் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஊரடங்கின் போது சாலைகளில் தேவையில்லாமல் சுற்றிதிரிபவர்களுக்கு போலீசார் அபராதம் விதித்தனர். மேலும் பால், மருந்து கடைகள் தவிர ஓட்டல்கள், டீக்கடைகள் திறக்கப்படவில்லை. அதேபோல வேளாங்கண்ணி, வேதாரண்யம், மயிலாடுதுறை, சீர்காழி உள்ளிட்ட பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் அந்த பகுதிகள் மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.


முழு ஊரடங்கையொட்டி திருவாரூர் நகரில் எந்தநேரமும் பரபரப்பாக காணப்படும் கடைவீதி, நகைக்கடை சந்து, நேதாஜி ரோடு, பழைய தஞ்சை சாலை, பனகல் சாலை, தெற்கு வீதி போன்ற இடங்களில் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. இதனால் மக்கள் வீடுகளில் முடங்கியதால் அனைத்து சாலைகளும் எவ்வித நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. லாரி, வேன், ஆட்டோ உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் முற்றிலும் இயக்கப்படவில்லை. மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டன. மருந்து கடைகள், மருத்துவமனைகள் மட்டுமே செயல்பட்டன. போலீசார் தொடர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தேவையற்று வெளியில் சுற்றுபவர்களை போலீசார் எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். திருவாரூர் தாசில்தார் நக்கீரன், நகராட்சி ஆணையர் (பொறுப்பு) முத்துகுமரன் தொடர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

மேலும் செய்திகள்