வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த கன்டெய்னர் பெட்டிகளை உடைத்து ரூ.50 லட்சம் டயர்கள் திருட்டு

வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய இருந்த 2 கன்டெய்னர் பெட்டிகளை உடைத்து ரூ.50 லட்சம் மதிப்பிலான டயர்களை திருடிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2020-07-27 22:15 GMT
திருவொற்றியூர்,

எண்ணூர் விரைவுச்சாலையில் உள்ள கன்டெய்னர் யார்டில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய வைக்கப்பட்டிருந்த 2 கன்டெய்னர் பெட்டிகளின் சீலை உடைத்து, அதில் இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள டயர்கள் திருடப்பட்டு உள்ளதாக எண்ணூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அதன்பேரில் எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்கு சென்று, சம்பவத்தன்று அந்த கன்டெய்னர் லாரிகளை ஓட்டிவந்த திருவொற்றியூர் ராஜா சண்முகம்நகர் பகுதியைச் சேர்ந்த இளமாறன் (வயது 28), அதே பகுதியை சேர்ந்த காளிமுத்து(31) ஆகியோரை பிடித்து விசாரித்தனர்.

ரூ.50 லட்சம் மதிப்பு

அதில் டிரைவர்கள் இருவரும் கடந்த 24-ந் தேதி வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்வதற்காக ஸ்ரீபெரும்புதூரில் இருந்து கன்டெய்னர் லாரிகளில் டயர்களை ஏற்றிக்கொண்டு எண்ணூரில் உள்ள சரக்கு முனையத்துக்கு வந்தனர். வரும் வழியில் சத்தியமூர்த்தி நகரில் அதிகாலையில் லாரியை நிறுத்திவிட்டு அக்பர் என்பவருக்கு போன் செய்தனர்.

அக்பர் தனது ஆட்கள் மூலம் 2 கன்டெய்னர் லாரிகளையும் எடுத்துச்சென்று எண்ணூர் காமராஜர் நகர் பகுதியில் உள்ள ஒரு குடோனில் வைத்து லாரிகளில் இருந்த கன்டெய்னர் பெட்டிகளின் சீலை அகற்றி விட்டு, உள்ளே இருந்த ரூ.50 லட்சம் மதிப்புள்ள 224 டயர்களை திருடினர். பின்னர் மீண்டும் சீல் வைத்து அதே இடத்தில் கன்டெய்னர் லாரிகளை விட்டுள்ளனர்.

4 பேர் கைது

அதன்பிறகு டிரைவர்கள் இருவரும் எண்ணூரில் உள்ள சரக்கு முனையத்தில் லாரிகளை விட்டுள்ளனர். ஆனால் அங்குள்ளவர்களுக்கு கன்டெய்னர் பெட்டியின் சீல் உடைக்கப்பட்டதுபோல் சந்தேகம் வரவே எண்ணூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர்.

போலீசார் விரைந்து சென்று டிரைவர்களை பிடித்து விசாரணை செய்தபோது டயர்களை திருடி எண்ணூர் காமராஜர் நகர் குடோனில் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. உடனடியாக போலீசார் அங்கு சென்று டயர்களை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக டிரைவர்கள் இளமாறன், காளிமுத்து உள்பட 4 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்