கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தகவல்

கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியிருப்பதாக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறியுள்ளார்.

Update: 2020-07-28 20:26 GMT
பெங்களூரு,

குடிநீர் பயன்பாட்டிற்காக பெலகாவி மாவட்டம் கானாபுரா தாலுகா கனககும்பி கிராமம் அருகே உள்ள மகதாயி ஆற்றின் குறுக்கே அணை கட்டி அதன் மூலம் 1.72 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீரை மல்லபிரபா ஆற்றுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு அரசு நிர்வாக ஒப்புதலை வழங்கியுள்ளது.

அதே போல் நெரசி கிராமத்தின் அருகே அணை கட்டி 2.18 டி.எம்.சி. நீரை மல்லபிரபா ஆற்றுக்கு கொண்டுவர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தான் கலசா-பண்டூரி குடிநீர் திட்டம் ஆகும். இந்த திட்டத்தின் மூலம் மகதாயி ஆற்றில் இருந்து மொத்தம் 2.90 டி.எம்.சி. நீர் மல்லபிரபா ஆற்றிற்கு கொண்டு வரப்படுகிறது.

எடியூரப்பாவுக்கு நன்றி

இந்த கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்கு அனுமதி வழங்கிய முதல்-மந்திரி எடியூரப்பாவுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜனதா அரசு அமைந்து ஒரு ஆண்டு ஆகும் நிலையில் இந்த கலசா-பண்டூரி குடிநீர் திட்டத்திற்கு அனுமதி கிடைத்திருப்பது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. இந்த திட்டத்தை எங்கள் அரசு விரைவாக செயல்படுத்தும். இதற்கான கட்டுமான பணிகளை முதல்-மந்திரியுடன் ஆலோசித்து தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.

மேலும் செய்திகள்