வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு 5 பேர் பலி

வேலூர், திருவண்ணாமலையில் கொரோனாவுக்கு 5 பேர் பலியானார்கள்.

Update: 2020-07-29 16:36 GMT
வேலூர்,

வேலூர், திருவண்ணாமலை மாவட்டத்தில் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 10 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மேலும் பலியானவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் கொரோனாவுக்கு 5 பேர் பலியாகி உள்ளனர்.

அதன் விவரம் வருமாறு:-

குடியாத்தம் தாலுகாவில் கொரோனா தொற்றால் நேற்று வரை 800-க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். குடியாத்தம் தரணம்பேட்டை காசிம் சாயபு தெருவை சேர்ந்தவர் அகமது அலி (வயது 67), இவர் அந்த பகுதியில் ஸ்வீட் கடை நடத்தி வந்தார். கடந்த சில நாட்களுக்கு முன் உடல்நிலை சரியில்லாததால் சிகிச்சைக்காக வேலூர் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதில் தொற்று கண்டறியப்பட்டது. தொடர்ந்து அங்கு சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதையடுத்து குடியாத்தம் தாலுகாவில் இதுவரை கொரோனா வைரஸ் தொற்றால் பலியானவர்களின் எண்ணிக்கை 23 ஆக உயர்ந்தது.

ஆரணி மூதாட்டி

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி கொசப்பாளையத்தை சேர்ந்தவர் சின்னராஜ். இவருடைய மனைவி முருகம்மாள் (64). இவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 25-ந் தேதி வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில் மூதாட்டிக்கு நேற்று மதியம் திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் மாலை 4 மணியளவில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இதேபோன்று பழைய காட்பாடி தர்மலிங்கம் தெருவை சேர்ந்த ஜெயராமன் (65) என்பவர் கொரோனா சிகிச்சைக்காக நேற்று மதியம் அதே மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் மாலையில் இறந்து போனார்.

அதைத்தொடர்ந்து 2 பேரின் உடல்களும் அவர்களின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

வாலிபர் பலி

வந்தவாசியை சேர்ந்த 29 வயது வாலிபர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா அறிகுறியால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் கொரோனா வைரஸ் தொற்று உறுதியானது. தொடர்ந்து சிகிச்சையில் இருந்த அவர் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்தார்.

அதேபோல் திருவண்ணாமலையை சேர்ந்த 57 வயது நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களுக்கு முன்பு திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் உயிரிழந்தார்.

மேலும் செய்திகள்