கொலை, விபத்தில் இறப்பு: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு விரைவாக பெற்று தரப்படும் போலீஸ் சூப்பிரண்டு பேட்டி

கோவை மாவட்டத்தில் கொலை, விபத்து இறப்பு வழக்குகளில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடு விரைவாக பெற்றுத் தரப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு கூறினார்.

Update: 2020-07-29 22:55 GMT
கோவை,


கோவை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு கூறியதாவது:-

குற்றத்தடுப்பு பணி

கோவை மாவட்டத்தில் சட்டம்- ஒழுங்கு, குற்றத்தடுப்பு பணிகளில் போலீசார் தீவிர கவனம் செலுத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. நில அபகரிப்பு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் பொதுமக்கள் அளித்த புகார் மனுக்களில் சில நிலுவையில் உள்ளது. அதை விரைவாக விசாரித்து முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் மனுக்கள் மீது ஒரு மாதத்துக்குள் விசாரணை நடத்தி முடிக்க ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

கொலை, கொலை முயற்சி, விபத்தில் இறப்பு, விபத்தில் படுகாயம் அடைதல், தாக்குதலில் காயம் அடைதல் போன்ற வழக்குகளில் பாதிக் கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நல நிதி பெற்று தருவதில் போலீசாரின் பங்கு மிக முக்கியமாக இருக்கிறது. கடந்த 3 ஆண்டாக பாதிக்கப்பட்டோர் நல நிதி தொடர்பாக 200-க்கும் மேலான விண்ணப்ப மனுக் கள் கிடப்பில் இருக்கிறது.

பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு

இந்த மனுக்கள் தொடர்பாக விரைவாக நடவடிக்கை எடுத்து சட்டத்துறைக்கு அனுப்பினால்தான் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தின ருக்கு இழப்பீடு கிடைக்க வழிவகை செய்யப்படும். விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும், கொலை வழக்கில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சமும் நிவாரண தொகையாக பெற்று தர முடியும்.

எனவே மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் பாதிக்கப்பட்டோர் நல உதவி தொகை பெறும் விண்ணப்பங்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் பலர் இதுதொடர்பான விண்ணப்பிக்காமல் உள்ளனர். எனவே பொதுமக்கள் இந்த விவரங்களை தெரிந்துகொண்டு விண்ணப்பித்து பயன்பெற வேண்டும். தாழ்த்தப்பட்டோர் மற்றும் சிறார் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் உரிய நலநிதி பெறும் விண்ணப்பங்கள் மீதும் உரிய காலத்தில் விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும்.

சட்டம் -ஒழுங்கு பிரச்சினை

கொரோனா ஊரடங்கால் ஏப்ரல், மே மாதங்களில் விபத்து, குற்ற வழக்குகள் அரிதாக இருந்தது. தற்போது அடிதடி, மோதல் தற்கொலை உள்ளிட்ட சில வழக்குகள் வழக்கமான நிலையில் வந்துகொண்டு இருக்கிறது. மாவட்ட அளவில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை எதுவும் இல்லை. கொரோனா பரவலை தடுக்க போலீஸ் நிலையங்களில் 7 பேருக்கும் மேல் அமர்ந்து பணியாற்றக்கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்