தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் 4 மாதங்களில் 3 ஆயிரத்து 103 பிரசவங்கள் முதல்வர் தகவல்

தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 4 மாதங்களில் 3 ஆயிரத்து 103 பிரசவங்கள் நடைபெற்றுள்ளதாக மருத்துவமனை முதல்வர் டாக்டர் இளங்கோவன் தெரிவித்தார்.

Update: 2020-07-30 00:02 GMT
ஆண்டிப்பட்டி, 

தேனி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதுவரையில் தேனி மாவட்டத்தில் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பாதிப்பு காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 4 மாதங்களில் அதிகமான பிரசவங்கள் நடைபெற்றுள்ளது.

அதிலும் பிரசவத்துக்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணி பெண்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்படாத வகையில் முறையான முன்ஏற்பாடுகள் பிரசவ வார்டுகளில் செய்யப்பட்டுள்ளது. இதன்காரணமாக கடந்த 4 மாதங்களில் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 3 ஆயிரத்து 103 பிரசவங்கள் நடைபெற்று உள்ளது.

தொடர் கண்காணிப்பு

இதில் அறுவை சிகிச்சை மூலம் 1,533 பிரசவங்கள் நடந்துள்ளது. இதுமட்டுமின்றி 101 கர்ப்பிணி பெண்கள் கொரோனா தொற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களில் 70 பேர் குணமடைந்து, பிரசவமும் முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் கொரோனா பாதிப்புக்கு உள்ளான ஒரு பெண்ணுக்கு இரட்டை குழந்தைகள் பிறந்துள்ளது. மீதமுள்ள 31 பேரில் 7 பேர் பிரசவத்திற்கு இன்னும் நாட்கள் உள்ள நிலையில் கொரோனா சிகிச்சை மட்டும் பெற்று வீடு திரும்பியுள்ளனர். மற்ற பெண்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.

இந்த கொரோனா காலக்கட்டத்தில் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளுக்கு பாதுகாப்பான முறையில் சிகிச்சை வழங்கி, தாயும் சேயும் நலமுடன் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுவதாக மருத்துவமனை முதல்வர் டாக்டர் இளங்கோவன் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்