விருத்தாசலம் அருகே என்ஜின் இல்லாமல் நடுவழியில் நின்ற சரக்கு ரெயில் பெட்டிகள்

விருத்தாசலம் அருகே என்ஜின் இல்லாமல் நடுவழியில் நின்ற சரக்கு ரெயில் பெட்டிகளால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-07-30 00:22 GMT
விருத்தாசலம், 

கடலூரில் இருந்து விருத்தாசலம் வழியாக சேலம் நோக்கி நேற்று காலை 7 மணிக்கு 60 பெட்டிகளில் அரிசி, பருப்பு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை ஏற்றிக்கொண்டு சரக்கு ரெயில் ஒன்று சென்றது. அந்த ரெயில் விருத்தாசலம் அருகே 5 கிலோ மீட்டர் தூரமுள்ள சின்ன வடவாடி சென்ற போது, அதிக பாரம் காரணமாக என்ஜின் இழுக்கவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ரெயில் என்ஜின் டிரைவர் இது பற்றி ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில் ரெயில் பெட்டிகளில் 28 பெட்டிகளை, ரெயில்வே அதிகாரிகள், ஊழியர்கள் நடுவழியிலேயே தண்டவாளத்தில் கழற்றி தனியாக விட்டனர். தொடர்ந்து சக்கரம் நகராமல் இருக்க முட்டுக்கட்டை கொடுத்து அங்கேயே நிறுத்தினர்.

பரபரப்பு

பின்னர் மீதியுள்ள 32 பெட்டிகளுடன் ரெயில் புறப்பட்டு சென்றது. அதையடுத்து சின்னசேலம் ரெயில்வே நிலையத்திற்கு சென்றதும், அங்கு அந்த ரெயில் பெட்டிகளை கழற்றி விட்ட டிரைவர் என்ஜினுடன் மீண்டும் திரும்பி வந்தார். பின்னர் தண்டவாளத்தில் கழற்றி விடப்பட்ட 28 பெட்டிகளையும் என்ஜினில் பொருத்தி ரெயில் மதியம் 2 மணிக்கு சேலம் நோக்கி புறப்பட்டு சென்றது.

கொரோனா பரவல் காரணமாக தற்போது எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில் போக்குவரத்து சேவை நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் ரெயில் சேவையில் பாதிப்பு ஏற்படாது என்கிற நோக்கில் நடுவழியில் 28 பெட்டிகளை நிறுத்தி விட்டு, பின்னர் என்ஜின் மூலம் மீண்டும் வந்து இழுத்து செல்ல அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர். இருப்பினும் 7 மணி நேரம் தண்டவாளத்தில் அத்தியாவசிய பொருட்களுடன் என்ஜின் இல்லாமல் சரக்கு பெட்டிகள் மட்டும் நின்றதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்