கொரோனா தடுப்பு நடவடிக்கை தீவிரம்: கட்டுப்பாடுகளை மீறும் கடைகளுக்கு பாரபட்சமின்றி ‘சீல்’ அதிகாரிகளுக்கு கலெக்டர் உத்தரவு

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, கட்டுப்பாடுகளை மீறி இயங்கும் கடைகளுக்கு பாரபட்சமின்றி ‘சீல்’ வைக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு கலெக்டர் அண்ணாதுரை உத்தரவிட்டுள்ளார்.

Update: 2020-07-30 01:09 GMT
விக்கிரவாண்டி, 

விக்கிரவாண்டியில் உள்ள தாலுகா அலுவலகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். இதில் சுகாதரத்துறை, வருவாய், ஊரக வளர்ச்சி மற்றும் காவல்துறையை சேர்ந்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். இவர்களிடம் விக்கிரவாண்டி பகுதியில் நடந்து வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள், பாதிப்புகள் குறித்து கேட்டறிந்த கலெக்டர் அண்ணாதுரை, பல்வேறு ஆலோசனைகளை வழங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

கடைகளுக்கு ‘சீல்’

விக்கிரவாண்டி பகுதியில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட பகுதிகளில், கண்காணிப்பு குழுவினர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அந்த பகுதியில் மருத்துவ முகாமை துரிதமாக நடத்தி, சத்து மாத்திரைகளை வழங்கிட வேண்டும். மேலும் கிராமங்களில் உள்ள மகளிர் சுயஉதவி குழுக்களை ஒருங்கிணைத்து வீடு, வீடாக சென்று கொரோனா பரவல் குறித்த விளக்கம் அளிப்பதுடன், யாரேனும் சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்களா என்றும் ஆய்வு செய்ய வேண்டும். கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் கிருமி நாசினி தெளித்து தொற்று மேற்கொண்டு பரவாமல் தடுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து மேற்கொள்ள வேண்டும்.

பேரூராட்சி பகுதியில் செயல்படும் கடைகளை கண்காணிப்பதுடன், தனிமனித இடைவெளி கடைபிடிக்காமலும், முககவசம் அணியாமல் இருப்பது போன்ற கட்டுப்பாடுகளை மீறி இயங்கும் கடைகளுக்கு பாரபட்சமின்றி ‘சீல்’ வைக்க வேண்டும், ரேஷன் கடைகளிலும் தனிமனித இடைவெளியை கடைபிடிக்க பொதுமக்களிடம் அறிவுறுத்திட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மண்டல கண்காணிப்பு அலுவலர் சப்-கலெக்டர் இந்துமதி, சுகாதார துறை துணை இயக்குனர் செந்தில் குமார், வட்டார மருத்துவ அலுவலர் வினோத், தாசில்தார் பார்த்தீபன், மண்டல துணை தாசில்தார் முருகதாஸ், தனி தாசில்தார் வெங்கட சுப்பிரமணியன், வட்ட வழங்கல் அலுவலர் அய்யனார், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நந்தகோபாலகிருஷ்ணன், எழிலரசு, பேரூராட்சி செயல் அலுவலர் ஷேக் லத்தீப், சுகாதார மேற்பார்வையாளர் கிருஷ்ணன், வருவாய் ஆய்வாளர்கள் விஜயன், குமரன், மெகருனிஷா, தரணி, செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்