மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு கடைகள் அடைப்பு; சாலைகள் வெறிச்சோடின

மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதியில் கொரோனாவை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடைகள் அடைக்கப்பட்டன. இதன் காரணமாக போக் குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடின.

Update: 2020-07-30 05:30 GMT
பாலக்கோடு

தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதியில் 15 வார்டுகள் உள்ளன. இங்கு பணிபுரிபவர்களில் 7 தூய்மை பணியாளர்களுக்கு கொரோனா உறுதியானது. மாரண்டஅள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணிபுரிந்த செவிலியருக்கும் கொரோனா தொற்று உறுதியானது. கொரோனா தொற்று இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்த 18 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது.இதன் மூலம் மேலும் பலருக்கு கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

இதையடுத்து வெளிமாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து வருபவர்களை தனிமைப்படுத்தி பரிசோதிப்பதற்கான நடவடிக்கைகளை பேரூராட்சி நிர்வாகம் தீவிரப்படுத்தியது. சளி, காய்ச்சல் பாதிப்பு உள்ளவர்களை கண்டறிந்து பரிசோதனைக்கு உட்படுத்த சுகாதாரத்துறை மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

முழு ஊரடங்கு

மாரண்டஅள்ளி பேரூராட்சி பகுதியில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த 20 நாட்களுக்கு முழு ஊரடங்கை பேரூராட்சி நிர்வாகம் அமல்படுத்தியது. பேரூராட்சி பகுதியில் உள்ள மளிகை கடைகள், ஓட்டல்கள் டீக்கடைகள், பல்பொருள் வணிக வளாகங்கள், தனியார் நிறுவனங்கள் உள்பட அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களும் அடைக்கப்பட்டன. இதன்காரணமாக சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. மாரண்டஅள்ளி நகரில் ஆங்காங்கே உள்ள மருந்து கடைகள் மட்டும் திறந்திருந்தன. சாலைகளில் பொதுமக்கள் தேவையின்றி நடமாடுவதை தடுக்க போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டனர்.

மேலும் செய்திகள்