மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மீன் உற்பத்தியில் கர்நாடகம் முதல் இடத்தை பிடிக்கும் முதல்-மந்திரி எடியூரப்பா பேச்சு

மீன் வளர்ப்பு திட்டத்தின் கீழ் மீன் உற்பத்தியில் கர்நாடகம் முதல் இடத்தை பிடிக்கும் என்று முதல்-மந்திரி எடியூரப்பா கூறியுள்ளார்.

Update: 2020-07-30 22:40 GMT
பெங்களூரு,

மீன் வளர்ப்பாளர்கள் தின விழா பெங்களூருவில் உள்ள முதல்-மந்திரியின் கிருஷ்ணா இல்லத்தில் நேற்று நடைபெற்றது. இதில் முதல்-மந்திரி எடியூரப்பா கலந்து கொண்டு, மீன்துறை தொடர்பான திட்டங்கள் அடங்கிய கையேட்டை வெளியிட்டு பேசியதாவது:-

மீனவர்களின் நலனுக்காக இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.291 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அதே போல் கடலோர பகுதிகளின் மேம்பாட்டிற்காக ரூ.450 கோடி நிதி ஒதுக்கி இருக்கிறோம். விசை படகுகளுக்கு ஆண்டுக்கு ரூ.150 கோடிக்கு டீசல் மானியம் வழங்கப்படுகிறது. தண்ணீர் தேக்கி மீன் வளர்க்கும் தொழிலை ஊக்கப்படுத்த மல்பேயில் ரூ.2 கோடி செலவில் மீன்வளர்ப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது.

நவீன முறையில் மீன்பிடி தொழிலை மேற்கொள்ள விவசாயிகளுக்கு உதவி வழங்கப்படுகிறது. பிரதமர் அறிவித்துள்ள மீன்வள திட்டத்தின் கீழ் அதிக நிதியை பெற மாநில அரசு முயற்சி மேற்கொண்டுள்ளது. கர்நாடகத்தில் நான் முதல்-மந்திரியான உடனேயே மீனவர்களின் ரூ.60 கோடி கடனை தள்ளுபடி செய்தேன்.

உறுதி பூண்டுள்ளது

நாட்டின் மீன் உற்பத்தியில் கர்நாடகம் 4-வது இடத்தில் உள்ளது. மாநில அரசு அறிவித்துள்ள மீன் வளர்ப்பு திட்டத்தின் மூலம் மீன் உற்பத்தியில் கர்நாடகம் முதல் இடத்தை அடையும் என்ற நம்பிக்கை உள்ளது. மீனவர்களை பொருளாதார ரீதியாகவும், சமூக ரீதியாகவும் முன்னேற்ற அரசு உறுதி பூண்டுள்ளது. மீனவர்களின் நலனுக்காகவே சிறப்பு திட்டம் ஒன்றை அமல்படுத்தி இருக்கிறோம்.

இவ்வாறு எடியூரப்பா பேசினார்.

மீன் குஞ்சுகள் வினியோகம்

இந்த விழாவில் மீன்பிடி தொழில் மேற்கொள்ளும்போது மரணம் அடைந்த மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.6 லட்சம் நிதி உதவியை எடியூரப்பா வழங்கினார். மேலும் மீனவர்களுக்கு மீன் குஞ்சுகளையும் வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மீன்வளத்துறை மந்திரி கோட்டா சீனிவாசபூஜாரி, நகர வளர்ச்சித்துறை மந்திரி பைரதி பசவராஜ், வருவாய்த்துறை மந்திரி ஆர்.அசோக், மீன்வளத்துறை செயலாளர் மணிவண்ணன், இயக்குனர் ராமகிருஷ்ணன், மீன்தொழில் கூட்டமைப்பு தலைவர் யஷ்பால் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்