அன்னியூரில் கம்பு பயிரில் மகசூல் போட்டி

கம்பு பயிரில் அதிக மகசூல் போட்டி திட்டம் காணை வட்டாரத்தில் செயல்படுத்தப்படுகிறது.

Update: 2020-07-31 00:10 GMT
விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்ட விவசாயிகளிடையே பயிர் உற்பத்தியை அதிகரிக்கவும், உற்பத்தி திறனை அதிகரிக்கவும் அரசு சார்பில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதில் ஒரு திட்டமாக மாநில அரசு நிதி உதவியுடன் கம்பு பயிரில் அதிக மகசூல் போட்டி திட்டம் காணை வட்டாரத்தில் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் பதிவு செய்த விவசாயிகளின் வயலில் 50 சென்ட் பரப்பில் நடுவர்கள் முன்னிலையில் அறுவடை செய்து மகசூல் கணிக்கப்படுகிறது. அறுவடை முடிந்தவுடன் மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் அதிகப்படியான மகசூல் எடுத்த தலா 2 விவசாயிகளுக்கு பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ் வழங்கப்படும். அதன் அடிப்படையில் அன்னியூர் கிராமத்தில் மாநில அளவிலான போட்டிக்கு பதிவு செய்த வேலழகனின் வயலிலும், மாவட்ட அளவிலான போட்டிக்கு பதிவு செய்த வேணுகோபாலின் வயலிலும் நடுவர்களான வேளாண் துணை இயக்குனர்கள் செல்வபாண்டியன், ஏழுமலை, பெரியசாமி, உதவி இயக்குனர்கள் பிரேமலதா, சரவணன், விவசாய நடுவர் விஜயகுமாரி ஆகியோரின் முன்னிலையில் அறுவடை செய்யப்பட்டு மகசூல் கணிக்கப்பட்டது. பதிவு செய்த பிற விவசாயிகளின் வயலில் அறுவடை முடிந்தவுடன் மகசூல் கணிக்கப்பட்டு பரிசுகள் அறிவிக்கப்படும்.

இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை துணை வேளாண்மை அலுவலர் கோவிந்தராஜ், உதவி வேளாண்மை அலுவலர்கள் ரதினா, சுயம்பிரகாசம், கலையரசன், அன்பு, பயிர் அறுவடை பரிசோதனை பணியாளர்கள் கோமதி, கோகிலா ஆகியோர் செய்திருந்தனர்.

மேலும் செய்திகள்